சென்னை ஐ.ஐ.டி மாணவி பாத்திமா லத்திப் கல்லூரி வளாகத்தில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் கேரள மற்றும் தமிழக மக்களிடையே பெரும் கொதிப்பை ஏற்படுத்தியது. மாணவி லத்திபாவின் மரணச் செய்தி அடங்குவதற்குள் திருச்சியில் மற்றொரு மாணவி கல்லூரி விடுதியில் தூக்கிலிட்டு தற்கொலை செய்துக்கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருச்சி மாவட்ட கே.சாத்தனூர் பகுதியில் அய்மான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி உள்ளது. இந்த கல்லூரியில் தமிழக மாணவர்கள் மட்டுமின்றி, வெளிமாநில மாணவிகளும் பயின்று வருகின்றனர். அப்படி ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஜெப்ரா பர்வீன் என்ற மாணவி அறிவியல் பாடப் பிரிவில் உணவியல் துறையில் முதலாம் ஆண்டு விடுதியில் தங்கி படித்துவருகிறார்.
இந்நிலையில், கல்லூரிக்கு நேரமாகிவிட்டதால் காலையில் இருந்து கதவை திறக்கவில்லை என சகமாணவர்கள் மாணவி தங்கி இருந்த அறையின் கதவை உடைத்துச்சென்று பார்த்துள்ளனர்.
அப்போது மாணவி ஜெப்ரா பர்வீன், தூக்கில் சடலமாக இருந்துள்ளார். அதனைப் பார்த்த சகமாணவர்கள் அதிர்ச்சி அடைந்து கல்லூரி நிர்வாகத்திற்கு தகவல் கொடுத்தனர். பின்னர் கல்லூரி நிர்வாக அளித்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கே.கே.நகர் போலிஸார் மாணவியின் உடலை மீட்டு பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். அந்த விசாரணையில் இரண்டு வித தகவல் கிடைத்துள்ளதாக போலிஸ் தரப்பில் கூறப்படுகிறது. முதலில் கல்லூரி நிர்வாகத்திடம் நடத்திய விசாரணையில், மாணவி பள்ளிப்படிப்பை அவர்களின் தாய்மொழியில் படித்துள்ளார். ஆனால், அங்கு ஆங்கிலத்தில் பாடம் நடத்துவதால் அதனைப்புரிந்துக் கொள்ள முடியாத விரத்தில் மாணவி தற்கொலை செய்து கொண்டதாக கூறியுள்ளனர்.
ஆனால், விடுதியில் உள்ள மாணவர்களிடம் போலிஸார் நடத்திய விசாரணையில், விடுதி காப்பாளர் உளவியல் ரீதியில் நடத்திய தொல்லையால் மாணவி இந்த முடிவை எடுத்திருக்கலாம் என கூறியுள்ளனர்.
இதுதொடர்பாக மாணவர் ஒருவர் அளித்துள்ள தகவலில், இந்த கல்லூரியில் படித்துவரும் மாணவர்கள் யாரும் செல்போன் பயன்படுத்தக்கூடாது என்ற கட்டுப்பாடு உள்ளது. ஆனால், விடுதியில் உள்ள சில மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திற்கு தெரியாமல் செல்போன் பயன்படுத்திவந்துள்ளனர். அப்படிதான், ஜெப்ரா பர்வீன் விடுதி காப்பாளருக்கு தெரியாமல் செல்போன் பயன்படுத்தியுள்ளார். இது அவர்களின் பெற்றோருக்கும் தெரியும் என கூறப்படுகிறது.
இந்நிலையில் பர்வீன் செல்போன் பயன்படுத்தியது விடுதி காப்பாளருக்கு தெரிந்து அவரை சகமாணவர்கள் முன்னிலையில் மோசமான முறையில் திட்டியுள்ளார். இதனால் மனமுடைந்த ஜெப்ரா பர்வீன், அதேக்கல்லூரியில் படிக்கும் ஜார்க்கண்ட் மாநில மாணவி ஆதிபாவி என்ற மாணவிடம் சொல்லி அன்றிறவு அழுதுள்ளார்” என்று தெரிவித்துள்ளனர்.
மேலும் மாணவி இறந்த தகவலைத் தெரிவிக்காமல், உடல்நிலை சரியில்லை கல்லூரிக்கு வரும்படி மாணவின் பெற்றோர்க்கு கல்லூரி நிர்வாகம் கூறியதாகக் தெரியவந்துள்ளது. இதுபற்றி ஊடகங்களுக்கு பேச கல்லூரி நிர்வாகம் மறுத்துள்ளதாக கூறப்படுகிறது. தமிழகத்திற்கு படிக்கவரும் வெளிமாநில மாணவர்களின் தற்கொலை அதிகரிப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.