கடந்த 2010-ம் ஆண்டு கோவையில் உள்ள தனியார் பள்ளியில் படித்து வந்த சிறுமி முஸ்கான் மற்றும் சிறுவன் ரித்திக் ஆகியோர் கடத்திப் படுகொலை செய்யப்பட்டனர். அவர்களது உடல்கள் பொள்ளாச்சி அருகே மீட்கப்பட்டன. பின்னர் நடைபெற்ற பிரேதப் பரிசோதனையில் சிறுமி முஸ்கான் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.
அதனையடுத்து நடைபெற்ற போலிஸ் விசாரணையில் வாடகை கார் ஓட்டுநர் மோகன்ராஜ் என்பவரும், அவரது நண்பன் மனோகரனும் கைது செய்யப்பட்டனர். இந்தச் சம்பவம் தமிழகத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. போலிஸாரின் தீவிர விசாரணையில் குற்றவாளிகள் மோகன்ராஜும், மனோகரனும் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கு விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும்போது போலிஸ் காவலிலிருந்து மோகன்ராஜ் தப்பிக்க முயன்றபோது போலிஸார் அவரைச் சுட்டுக் கொன்றனர். பின்னர் மனோகரன் சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கைக் கோவை மாவட்ட மகளிர் நீதிமன்றம் விசாரித்தது.
இந்த வழக்கில் பள்ளிச் சிறுவர்களைக் கடத்திக் கொலை செய்த வழக்கில் குற்றவாளியான மனோகரனுக்கு இரட்டை தூக்குத் தண்டனையும், மூன்று ஆயுள் தண்டனையும் விதித்து கடந்த 2012, நவம்பர் 1ல் தீர்ப்பு அளிக்கப்பட்டது.
அந்த தீர்ப்புக்கு எதிராக சீராய் ஆய்வு மனு தாக்கல் செய்யப்பட்டு விசாரணை நடைபெற்றது. அதன் மீதான தீர்ப்பை கடந்த அக்டோபர்-16ம் தேதி ஒத்திவைத்த நீதிபதிகள் இன்று வரை தூக்கு தண்டணையை நிறுத்தி வைத்து இடைக்கால உத்தரவு பிறப்பித்தனர்.
இன்று தீர்ப்பு வழங்கிய நீதிபதி பாலி நாரிமன் தலைமையிலான அமர்வு சீராய்வு, மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. இதன் மூலம் குற்றவாளி மனோகரனுக்கு தூக்குதண்டனையை உறுதி செய்தது உச்சநீதிமன்றம். மேலும் இந்த தீர்ப்பை ஆதரித்து பலரும் சமூக வலைதளங்களில் கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர்.
தற்போது மனோகரன் கடலூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளான். அடுத்தகட்டமாக மறு சீராய்வுமனு தாக்கல் செய்யவும், குடியரசுத் தலைவரிடம் கருணை மனு தாக்கல் செய்யவும் இரண்டு வாய்ப்புகள் உள்ளன. இல்லை என்றால் தூக்குத்தண்டனை விரைவில் நிறைவேற்றப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.