வெளிநாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையம் வழியாக தங்கம், வெளிநாட்டுப் பணம், கடல் வாழ் உயிரினங்கள் உள்ளிட்டவை கடத்தப்படும் சம்பவங்கள் அதிகமாக நிகழ்ந்து வருகின்றன.
கடத்தலைத் தடுக்க அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தபோதிலும் குறைந்தபாடில்லை. இந்நிலையில் துபாய், சிங்கப்பூர், மலேசியா உள்ளிட்ட வெளிநாடுகளில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு தங்கம் கடத்தி வரப்படுவதாக சென்னை மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து சுங்கத்துறை வருவாய் புலனாய்வு பிரிவு துணை இயக்குனர் கார்த்திகேயன் தலைமையில் 22 அதிகாரிகள்அடங்கிய குழுவினர் நேற்றிரவு திருச்சி விமான நிலையத்திற்கு வந்து, பயணிகளின் உடைமைகளை சோதித்தனர்.
பயணிகள் கொண்டு வந்த மின்சாதனங்கள் உள்ளிட்ட பொருட்களில் நவீன கருவிகள் மூலம் சோதனை மேற்கொண்டனர். ஒவ்வொரு பயணியிடமும் தனித்தனியாக சோதனை நடத்தப்பட்டது.
இதில் 150 பேர் தங்களது உடைமைகளுக்குள் மறைத்து, வெளிநாடுகளில் இருந்து தங்கத்தை கடத்தி கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர்களிடமிருந்து 30 கிலோ தங்கம் வரை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதிகளவு தங்கம் கடத்தி வந்த 15 பேரிடம், அதிகாரிகள் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். கடத்தலில் அதிகாரிகள் சம்பந்தப்பட்டிருக்கலாம் என்கிற கோணத்தில் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.
தங்கம் கடத்தி வந்தவர்கள் வியாபாரிகள் என்பதால், நேரடியாகவே கடத்தலில் ஈடுபடுகிறார்களா, தங்கத்தை மாற்றி விடும் குருவிகளாகச் செயல்படுகிறார்களா என்பது குறித்தும் விசாரணை நடைபெற்று வருகிறது.