மத்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு நவம்பர் மாதம் 8-ந்தேதி திடீரென ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் செல்லாது என்று அதிரடி அறிவிப்பை வெளியிட்டது.
ரூ.500, ரூ.1,000 நோட்டுகளை வைத்திருப்பவர்கள் வங்கிகளில் கொடுத்து மாற்றிக் கொள்ளலாம் என்று அவகாசம் வழங்கப்பட்டது. 50 நாட்களுக்கு அவகாசம் வழங்கப்பட்டதால் பொதுமக்கள் தங்களிடம் இருந்த 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொண்டனர்.
அந்த காலக்கட்டத்தில் ஜெயலலிதாவின் தோழி சசிகலா தன்னிடம் இருந்த 500 ரூபாய், 1000 ரூபாய் நோட்டுகளை பயன்படுத்தி சொத்துக்கள் வாங்கியதாக கூறப்படுகிறது. சுமார் ரூ.1,500 கோடிக்கு அவர் அப்போது சொத்துக்களை வாங்கி குவித்ததாக தெரிகிறது.
அந்த சொத்துக்கள் அனைத்தும் நிறுவனங்களாக வாங்கப்பட்டது. அந்த நிறுவனங்களை சசிகலா தனது பெயரிலோ அல்லது தனது குடும்பத்தினர் பெயரிலோ பதிவு செய்து மாற்றம் செய்து கொள்ளவில்லை. அதற்கு பதில் அந்த நிறுவனங்களின் உரிமையாளர்களின் பெயரிலேயே தொடர்ந்து செயல்பட அனுமதித்தார். ஆனால் அந்த நிறுவனங்களை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
சசிகலா மொத்தம் 7 நிறுவனங்களை அப்படி வாங்கியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பெரம்பூரில் உள்ள ஸ்பெக்ட்ரம் மால், கோவையில் செந்தில் பேப்பர் போர்டு, கோவையில் உள்ள ஸ்ரீலட்சுமி ஜுவல்லரி, புதுச்சேரியில் உள்ள ரிசார்ட் ஆகியவை சசிகலா வாங்கிய நிறுவனங்களில் அடங்கும் என்று தெரிகிறது.
இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டபோது ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அந்த சமயத்தில்தான் பணம் மதிப்பிழப்பு நோட்டுகளை பயன்படுத்தி அவர் இந்த சொத்துக்களை வாங்கியதாக கூறப்படுகிறது.
சசிகலா ரூ.1,500 கோடிக்கு பினாமி பெயர்களில் சொத்துக்கள் வாங்கியிருப்பது பற்றி வருமான வரித்துறைக்கு அடுத்தடுத்து ரகசிய தகவல்கள் கிடைத்தன. இதைத் தொடர்ந்து கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிரடியாக சசிகலா குடும்பத்தினர் மற்றும் அவர்களது உறவினர்களின் வீடுகளில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.
மொத்தம் 187 இடங்களில் இந்த சோதனை நடைபெற்றது. நூற்றுக்கணக்கான வருமான வரித்துறை அதிகாரிகள் வரவழைக்கப்பட்டு ஒரே நேரத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டது. சென்னை ஈக்காட்டுதாங்கலில் உள்ள ஜெயா டி.வி. அலுவலகம், மிடாஸ் மதுபான ஆலை ஆகிய இடங்களிலும் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.
வருமான வரித்துறை அதிகாரிகளின் சோதனை 5 நாட்களுக்கு நீடித்தது. இந்த 5 நாட்களும் ஏராளமான ஆவணங்கள், கணக்கில் காட்டாத பணம் சிக்கியது. அந்த ஆவணங்களை வருமான வரித்துறை அதிகாரிகள் மூட்டை மூட்டையாக கட்டி எடுத்துச் சென்றனர்.
சென்னையில் உள்ள வருமான வரித்துறை அலுவலகத்தில் அந்த ஆவணங்கள் அனைத்தும் ஆய்வு செய்யப்பட்டன. தனி அதிகாரிகள் குழு ஏற்படுத்தப்பட்டு செய்யப்பட்ட அந்த ஆய்வில் 60 போலி நிறுவனங்களை சசிகலா குடும்பத்தினர் நடத்தி வருவது கண்டுபிடிக்கப்பட்டது.
அந்த போலி நிறுவனங்கள் மூலம் ரூ.1,500 கோடிக்கு மேல் வருமான வரி ஏய்ப்பு செய்யப்பட்டு இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது.
இதற்கிடையே சசிகலா குடும்பத்தினர் வீடுகளில் சிக்கிய பல ஆவணங்கள் பினாமி பெயர்களில் சொத்துக்கள் வாங்கி இருப்பதை உறுதிப்படுத்துவதாக இருந்தன. இதையடுத்து சசிகலா குடும்பத்தினரை வருமான வரித்துறை அதிகாரிகள் சம்மன் அனுப்பி வரவழைத்து தீவிர விசாரணை நடத்தினார்கள்.
ஆவணங்களை காட்டி சசிகலா குடும்பத்தினரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது. அப்போது பினாமி பெயர்களில் சொத்துக்கள் வாங்கி இருப்பது வெட்ட வெளிச்சமானது. குறிப்பாக 2016-ம் ஆண்டு பணம் மதிப்பிழப்பு செய்யப்பட்டபோது பழைய ரூ.500 ரூ.1,000 நோட்டுகளை பயன்படுத்தி பல நிறுவனங்கள் வாங்கி இருப்பதும் தெரிய வந்தது.
இது தொடர்பாக வருமான வரித்துறை அதிகாரிகள் பெங்களூரு பரப்பன அக்ரஹாரம் சிறையில் உள்ள சசிகலாவிடமும் இளவரசியிடமும் விசாரணை நடத்தினார்கள். அவர்களிடமும் ஆவணங்களை காட்டி வருமான வரித்துறை அதிகாரிகள் கிடுக்கி பிடி கேள்விகளை கேட்டு பதில் பெற்றனர்.
சசிகலா குடும்பத்தினர் தெரிவித்த தகவல்களை வீடியோவில் பதிவு செய்து இருந்த வருமான வரித்துறையினர் அவற்றை மீண்டும் பார்த்து ஆய்வு செய்தனர். கடந்த 2 ஆண்டுகளாக இந்த ஆய்வு பணி தொடர்ந்து நடைபெற்று வந்தது.
அப்போது பறிமுதல் செய்யப்பட்ட ஆவணங்களின்படி சசிகலா குடும்பத்தினர் பினாமி பெயர்களில் சொத்துக்கள் வாங்கி குவித்து இருப்பது உறுதிப்படுத்தப்பட்டது. பினாமி பெயர்களில் அவர்கள் பல நிறுவனங்களை நடத்தி வருவதும் உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து பினாமி பெயர்களில் நடத்தப்பட்டு வந்த பல நிறுவனங்களை வருமான வரித்துறையினர் முடக்கி வைத்திருந்தனர். அந்த நிறுவனங்கள் மீது பினாமி சொத்து பரிமாற்ற சட்டத்தின்கீழ் நடவடிக்கை எடுக்க அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி வருமான வரித்துறையினர் சமீபத்தில் போலி நிறுவனங்களை கையகப்படுத்தும் பணிகளில் ஈடுபட்டனர்.
அதன்படி சசிகலா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு சொந்தமான பினாமி பெயர்களில் உள்ள 7 நிறுவனங்கள் தற்காலிகமாக கையகப்படுத்தப்பட்டு உள்ளன. பினாமி பெயர்களில் உள்ள அந்த 7 நிறுவனங்களும் ரூ.1,500 கோடிக்கு வாங்கப்பட்டு இருப்பதாக வருமான வரித்துறை அதிகாரிகள் தெரிவித்து இருப்பதாக ஆங்கில நாளிதழான டி.டி. நெக்ஸ்ட் தகவல் வெளியிட்டு உள்ளது.
அந்த தகவலில் மிக குறுகிய காலத்தில் பினாமி பெயர்களில் இந்த சொத்துக்கள் வாங்கப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதாக கூறப்பட்டுள்ளது. பினாமி பெயர்களில் உள்ள நிறுவனங்களை கையகப்படுத்தி இருப்பதை சிறையில் இருக்கும் சசிகலாவிடம் வருமான வரித்துறை அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்து இருப்பதாக தெரிய வந்துள்ளது.