தமிழகம் முழுவதும் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி 25-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தை மருத்துவர்கள் தொடங்கினர். அப்போது பணிக்கு திரும்பாத மருத்துவர்கள் மீது பணி முறிவு நடவடிக்கை எடுக்கப்படும் என அ.தி.மு.க அரசு எச்சரித்தது. பின்னர் போராட்டத்தில் ஈடுபட்ட நூற்றுக்கும் அதிகமான மருத்தவர்கள் கடந்த 28-ம் தேதி பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.
தமிழக அரசின் இத்தகைய நடவடிக்கைக்கு மருத்துவர் சங்கத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அரசு தங்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவேண்டும் என கோரிக்கை வைத்தனர். மேலும், நடவடிக்கை எடுத்தவர்கள் மீதும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்ககூடாது எனவும் வலியுறுத்தியுள்ளன.
இந்நிலையில், முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி போராட்டத்தை கைவிட்டால் பணி மாறுதல் மற்றும் மருத்துவர்கள் மீதான 17 பி பிரிவின் மீது நடவடிக்கை ரத்து செய்யப்படும் என்று அறிவித்தார். இதை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட மருத்தவர்கள் போராட்டத்தை கைவிட முடிவு செய்தனர். தொடர்ந்து 8 நாளாக நடைபெற்றுவந்த போராட்டத்தை மருத்துவர்கள் தற்காலிகமாக வாபஸ் பெற்றனர்.
இதனையடுத்து சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், அரசால் அறிவிக்கப்பட்டிருந்த பிரேக் இன் சர்வீஸ் உத்தரவு திரும்ப பெறப்படுகிறது. ஏற்கனவே உறுதியளித்தபடி, அரசு மருத்துவர்களின் கோரிக்கையை தமிழக அரசு பரிசீலிக்கும் என்று கூறியிருந்தார். அதைத்தொடர்ந்து அரசின் வாக்குறுதியை நம்பி மருத்துவர்கள் பணிக்குச் சென்றனர்.
பின்னர், மருத்துவமனைகளில் மருத்துவர்கள் பணிக்கு வந்ததால் இயல்புநிலை திரும்பியது. இந்நிலையில், தமிழக அரசு உறுதி அளித்தபடி 70 டாக்டர்கள் பணியிட மாற்றம், 1,000 மருத்துவர்கள் மீதான 17 பிரிவு மீதான நடவடிக்கை தற்போது வரை ரத்து செய்யப்படவில்லை என்று மருத்துவ சங்க நிர்வாகிகள் குற்றம்சாட்டியுள்ளனர்.
இந்நிலையில், இதுகுறித்து மருத்துவர் சிவபாலன் இளங்கோவன் சமூகவலைதளத்தில் கருத்துத் தெரிவித்துள்ளார். அதில், “வேலைநிறுத்தத்தில் ஈடுபட்ட ஏராளமான மருத்துவர்கள் கட்டாய பணி மாறுதல் செய்யப்பட்டுள்ளனர். அப்படி பணி மாறுதல் செய்யப்பட்ட நிறைய மருத்துவர்களிடம் பேசினேன். பெரும்பாலனவர்கள் "அரசுப் பணியை விட்டு செல்வதை தவிர வேற வழியில்லை" என்று முடிவெடுத்திருக்கின்றனர். இது உண்மையில் மருத்துவத் துறைக்கும், மக்களுக்கும் ஒரு மிகப்பெரிய இழப்பு.
ஏனென்றால் அரசுப்பணியில் மிக நேர்மையாகவும், உண்மையாகவும் இருக்கும் மருத்துவர்கள் மட்டுமே ஊதியத்திற்காக போராடுவார்கள், ஏனென்றால் அவர்கள் அரசுப்பணி ஊதியத்தை மட்டுமே நம்பியிருக்கிறார்கள். தனியார் மருத்துவமனைகளிலும், தங்களது சொந்த கிளினிக்கிலும் பெரும்பாலான நேரங்களை செலவிட்டு அரசுப் பணிக்கு கேஷுவலாக வந்து செல்லும் மருத்துவர்கள் நிச்சயம் அரசாங்க ஊதியத்தை நம்பியிருக்க மாட்டார்கள், அதைப்பற்றி கவலையும் பட மாட்டார்கள்.
அரசாங்க பணியில் முழுமையாகவும், நேர்மையாகவும், அற்பணிப்புடனும் இருந்த மருத்துவர்கள் தங்களது பணியிடங்களில் இருந்து எங்கோ ஒரு மூலைக்கு தூக்கி அடிக்கப்பட்டு இருக்கின்றனர், அப்படிப்பட்ட நேர்மையான மருத்துவர்களை நிச்சயம் அந்த மருத்துவமனையும், அதை சார்ந்த மக்களும் இழந்திருக்கின்றனர்.
பொது மருத்துவத்துறை உண்மையில் ஒரு மிகப்பெரிய சீரழிவின் விளிம்பில் நிற்கிறது, மக்கள் அனைவரும் இந்த பணி மாறுதலுக்கு எதிராக நிற்காவிட்டால் இழப்பு உண்மையில் நமக்கே.” எனக் கூறியுள்ளார். மேலும், மருத்துவர் சங்க கூட்டமைப்பினர் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரை சந்தித்து இது குறித்து முறையிடவுள்ளதாக கூறப்படுகிறது.