நடிகர் விஜய் நடித்த 'பிகில்' திரைப்படம் கடந்த 25-ம் தேதி வெளியானது. பிகில் படத்தின் சிறப்புக்காட்சி அதிகாலை 4 மணிக்கு சென்னை உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் திரையிடப்பட்டது. ரசிகர்கள் அதிகளவு கூடியதால் ஒரு சில திரையரங்குகளில் சிறப்புக்காட்சி ஒரு மணி நேரம் தாமதமாக திரைப்படம் தொடங்கப்பட்டது.
கிருஷ்ணகிரியில் பிகில் படம் திரையிடப்பட்ட திரையரங்கின் முன்பாக ரசிகர்கள் கூட்டம் அதிகமானதால் பிகில் படத்தின் சிறப்புக் காட்சி திரையிட தாமதமானது. இதனைத்தொடர்ந்து ஆத்திரம் அடைந்த விஜய் ரசிகர்கள் சிலர் ரவுண்டானா பகுதியில் கண்காணிப்புக் கேமராக்கள், சிக்னல் விளக்குகள், கண்காணிப்பு கோபுரங்கள், தடுப்பு வேலிகள் போன்றவற்றை உடைத்தெறிந்து கலவரத்தில் ஈடுபட்டனர்.
இதையடுத்து அதிவிரைவு படை போலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று லேசான தடியடி நடத்தி விஜய் ரசிகர்களை கலைத்தனர். இந்த சம்பவம் தொடர்பாக ஓசூர் மற்றும் சூளகிரி பகுதியை சேர்ந்த 37 பேரை பிடித்து போலிஸார், முதற்கட்டமாக 32 பேரை கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
மேலும் நடைபெற்ற விசாரணையில், கிருஷ்ணகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த 7 சிறுவர்கள் உள்பட மேலும் 18 பேரை கைது செய்துள்ளனர். கலவரம் தொடர்பாக, இதுவரை 50 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், தலைமறைவாக உள்ள மேலும் பலரைபோலிஸார் தேடி வருவதாக செய்திகள் வெளியாகியுள்ளது. போலிஸாரின் இத்தகைய நடவடிக்கை விஜய் ரசிகர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், வழக்குப்பதிவு செய்து, அபராதம் விதிக்காமல் சிறையில் தள்ளுவதால் இளைஞர்களின் எதிர்காலம் பாதிக்கப்படும் என்று, போலிஸாரின் கெடுபிடிகளால் தான் இளைஞர்கள் அத்திரமடைந்தார்கள் என்றும் சமூக ஆர்வலர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.