திருச்சி மாவட்டம் மணப்பாறை அடுத்த நடுக்காட்டுப்பட்டியில் உள்ள ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் சுஜித் 5 நாள் மீட்பு போராட்டத்தை அடுத்து உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்டெடுக்கப்பட்டான்.
அதனையடுத்து, சிறுவன் சுஜித்தின் சடலம் உடற்கூறாய்வுக்கு உட்படுத்தப்பட்ட பிறகு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மணப்பாறை அடுத்துள்ள கரட்டுப்பட்டி அருகே பாத்திமா புதூரில் உள்ள கல்லறைத் தோட்டத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
இந்த சம்பவம் தமிழக மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அரசியல் கட்சியினர் ஜனநாயக அமைப்பினர் சிறுவன் சுஜித் குடும்பத்தில் உள்ளவர்களுக்கு உதவி செய்ய முன்வந்துள்ளனர். இந்நிலையில் சுஜித் குடும்பத்தினருக்கு 1 கோடி ரூபாய் நிவாரணமும், ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க வேண்டும் என தொல்.திருமாவளவன் கோரிக்கை வைத்துள்ளனர்.
இதுகுறித்து சென்னை விமான நிலையத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களுக்கு அளித்தப் பேட்டி, “சிறுவன் சுஜித் உயிரை காப்பாற்றப்பட வில்லை என்று வேதனையையும் தலைகுணிவையும் ஏற்படுத்தி இருக்கிறது. உயிரை காப்பாற்ற தமிழக அரசு செய்த நடவடிக்கைகள் பாராட்டத்தக்கது.
அமைச்சர் விஜயபாஸ்கர் உள்பட அமைச்சர்கள், காவல்துறை, வருவாய் துறை, தீயணைப்பு துறை ஆகிய அரசு துறை அதிகாரிகள், தேசிய பேரிடர் பாதுகாப்பு படை ஆகியவை உயிரை காப்பாற்ற பெரும் முயற்சி செய்தனர். தனியார் நிறுவனங்களும், என்.எல்.சி. நிறுவன முயற்சியில் பெரும் பங்கு வகித்தன. ஆனாலும் சிறுவனை காப்பாற்ற இயலவில்லை.
அறிவியல், தொழில்நுட்ப துறைக்கு விடப்பட்டுள்ள சவால். இனி சுஜித் போன்ற உயிர்களை இழக்க கூடாது. மத்திய - மாநில அரசுகள் தொழில்நுட்ப வளர்ச்சியில் தீவிர கவனம் செலுத்த வேண்டும். சுஜித் குடும்பத்தினருக்கு 1 கோடி ரூபாய் நிவாரணமும் ஒருவருக்கு அரசு வேலையும் வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ஆழ்துளை கிணறு தோண்டுவது தொடர்பாக தமிழக அரசு தனி சட்டம் இயற்ற வேண்டும். 600 அடிகள் மேலாக தோண்டியும் தண்ணீர் கிடைக்கவில்லை. இதில் அறிவியல் உண்மை என்னவென்றால் நிலத்தடி நீர் மட்டம் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது.
பாறைகள் நிறைந்த மணப்பாறை மட்டுமின்றி பாறைகள் இல்லாத மற்ற பகுதிகளிலும் 500 அடிக்கு மேல் ஆழம். ஆழ்துளை கிணறை தோண்டி சுற்றுச்சூழலை பாதுகாக்க தவறிவிட்டோம். சுஜித் உயிரை காப்பாற்ற இயலவில்லை. எஞ்சி உள்ள உயிர்களை காப்பாற்ற சுற்றுச்சூழலை பாதுகாக்க வேண்டும்.
பூமியின் பாதுகாப்பு முக்கியமானது. சுஜித் உயிரிழப்பில் உணர வேண்டிய உண்மை. சுற்றுச்சூழல் பாதுகாப்பில் அரசும் பொதுமக்களும் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். மத்திய - மாநில அரசுகள் தண்ணீர், மீத்தேன், கணிம வளங்களை எடுக்கிறோம் என்ற பெயரில் சுற்றுச்சூழல் சிதைவதற்கு காரணமாக இருக்க கூடாது.
தமிழகத்தில் ஹைட்ரோகார்பன் திட்டம் முற்றிலும் கைவிடப்பட வேண்டும். மணல் அள்ளுவதை நிறுத்தப்பட வேண்டும். நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவதற்கு அனைத்து நடவடிக்கைகளில் மத்திய-மாநில அரசுகள் கவனம் செலுத்த வேண்டும்.
பேரிடரில் ஏற்படும் சேதங்களை விபத்தாக மட்டும் பார்க்க வேண்டும். யார் மீதும் குற்றம், பழி சொல்ல இயலாத நிலை உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் 13 மழலைகள் பலியாகி உள்ளதாக புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
இந்தியாவில் எத்தனை பேர் உயிரிழந்தனர் என்பதையும் கணக்கில் எடுக்க வேண்டும். ஆழ்துளை கிணறுகளை தோண்டுபவர்கள் மட்டுமல்ல அரசு அதிகாரிகளும் பொறுப்பாக இருந்து அவற்றை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும் என திருமாவளவன் கூறியுள்ளார்.