குமரிக் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம், அடுத்த 48 மணி நேரத்தில் புயலாக மாறக் கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதனால் தமிழகத்தில் குமரி, நெல்லை, விருதுநகர், ராமநாதபுரம், புதுக்கோட்டை, கடலூர், புதுச்சேரி, திருச்சி, அரியலூர், பெரம்பலூர், கோவை, வேலூர், திருவள்ளூர், காஞ்சிபுரம், காரைக்கால் உள்ளிட்ட 22 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.
வானிலை ஆய்வு மைய தென்மண்டல இயக்குநர் பாலச்சந்திரன், நுங்கம்பாக்கத்தில் உள்ள அலுவலகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், குமரிக் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக, தமிழகத்தில் தெற்கு, டெல்டா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார்.
குமரிக் கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக மாறும் பட்சத்தில் அதற்கு ‘மஹா’ என்று பெயர் சூட்டப்படும் என பாலச்சந்திரன் குறிப்பிட்டார். ஓமன் நாட்டின் சார்பில் இந்தப் பெயர் சூட்டப்பட்டுள்ளதாகக் கூறிய அவர், இந்தப் புயலால் தமிழகத்திற்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்றார். வடகிழக்கு பருவமழையை பொருத்தவரை இந்த மாதம் 20 சென்டி மீட்டர் பெய்துள்ளதாகவும், இது வழக்கத்தை விட 14 விழுக்காடு அதிகம் என்றும் தெரிவித்தார்.