தென்மேற்கு வங்கக்கடலில், தெற்கு இலங்கைக்கு அருகே நிலவும் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி காரணமாக அடுத்த சில நாட்களுக்கு தமிழகத்தில் பரவலாக மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், வானிலை குறித்து தமிழ்நாடு வெதர்மேன் என அழைக்கப்படும் பிரதீப் ஜான் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள பதிவுகளில், "இலங்கையில் நிலவும் காற்றழுத்தம் கன்னியாகுமரி கடல் பகுதிக்கு நகரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அது லட்சத்தீவு பகுதியில் குறைந்த காற்றழுத்தமாக மாறும்.
இதன் காரணமாக, அரபிக்கடலில் புயல் உருவாகவும் வாய்ப்புள்ளது. இதனால் டெல்டா மாவட்டங்கள் முதல் தென் தமிழகம் வரை அடுத்த 4 நாட்களுக்கு மழை பெய்யும். கன்னியாகுமரி, தூத்துக்குடி, ராமநாதபுரம், நெல்லை, தேனி, விருதுநகர், திண்டுக்கல் ஆகிய பகுதிகளில் மிக கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வடதமிழக கடலோர பகுதியில் சென்னை முதல் டெல்டா பகுதிகள் வரை நல்ல மழை பெய்யும். தமிழகத்தில் மற்ற மாவட்டங்களிலும் பரவலாக நல்ல மழை பெய்யும்.
மேகக் கூட்டங்கள் தீவிரமடைந்து சென்னையிலிருந்து திருச்சி வரை பரவியிருக்கின்றன. இதனால், விட்டு விட்டு மழை பெய்யும். ஒன்றை அடுத்து இன்னொன்று என மேகக் கூட்டங்கள் வந்துகொண்டே இருக்கும்.
கன்னியாகுமரி கடல் பகுதியில் இன்று மாலை காற்றழுத்தம் உருவாகும். அது லட்சத்தீவு பகுதிக்கு செல்லும். அங்கு குறைந்த காற்றழுத்தமாகவோ அல்லது புயலாகவோ உருவெடுக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.