அக்டோபர் 25ம் தேதி மணப்பாறை நடுக்காட்டுப்பட்டியில் உள்ள தனது வீட்டுக்கு அருகே விளையாடிக் கொண்டிருந்த போது தவறுதலாக வயல்வெளியில் இருந்த ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்தான் 2 வயது சிறுவன் சுர்ஜித்.
அதன் பிறகு கடந்த 5 நாட்களாக சிறுவனை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்றது. 80 மணிநேரத்தை கடந்த இந்த பணி நேற்று இரவு முற்று பெற்று ஆழ்துளை கிணற்றுக்குள் இருந்து இன்று அதிகாலை சிறுவன் சுர்ஜித்தின் உடல் அழுகிய நிலையில் மீட்கப்பட்டது.
உடற்கூறாய்வுக்கு உட்படுத்தப்பட்ட பிறகு பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட சுர்ஜித்தின் உடல் மணப்பாறை பாத்திமாபுதூரில் நல்லடக்கம் செய்யப்பட்டது. அதனையடுத்து சுர்ஜித்தின் மறைவுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி என பல அரசியல் தலைவர்களும், திரை பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சுர்ஜித் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங்.
அதில், “மீள முடியா துயரம்! என்னால எதும் செய்ய முடியல அப்பிடின்னு நெனச்சு அழுக வருது.போனது ஒரு உயிர் மட்டுமில்ல நம்ம ஒட்டுமொத்தப் பேரோட தன்னம்பிக்கை. இனியொரு உயிர் இந்த மாதிரி போகக் கூடாது. அவங்க அம்மா அப்பாக்கு யார் ஆறுதல் சொல்லுவாங்க. என் மனதில் என்றும் நீ நிற்பாய் மகனே #Sujith #RIPSujith ” என உருக்கமாக பதிவிட்டுள்ளார்.