தீபாவளி பண்டிகை நாளை நாடு முழுவதும் கொண்டாடப்படவுள்ள நிலையில் சென்னையில் வசிக்கும் மக்கள் தத்தம் சொந்த ஊருக்குச் செல்ல முற்பட்டு வருகின்றனர்.
கடைசி நேரத்தில் பேருந்து டிக்கெட் புக் செய்தாலும் அல்லது சில நாட்களுக்கு முன்னதாகவே பதிவு செய்திருந்தாலும் ஆயிரக்கணக்கில் கட்டண கொள்ளையில் தனியார் பேருந்துகள் ஈடுபட்டு வருகின்றன.
இதற்கு மக்கள் தரப்பில் கடுமையான கண்டனங்கள் தெரிவிக்கப்பட்டு வருகிறது.
சுமார் 600,700 ரூபாய் அளவில் இருந்த பஸ் கட்டணம் 1000, 2000 ரூபாய் அளவில் உயர்த்தப்பட்டுள்ளதாக பயணிகள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும், இந்த அதிகபடியான கட்டண வசூல் போக்குவரத்துத் துறைக்கு தெரிந்தே நடைபெறுவது கூடுதல் குமுறலையே மக்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.
இவ்வாறு இருக்கையில், இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்,” நான்கு மடங்கு கட்டணம் செலுத்தி பயணிக்கும் வகையில் நடக்கும் பகல் கொள்ளையை தமிழக போக்குவரத்துத் துறை தடுக்கவில்லை.
சொந்த ஊருக்குச் செல்பவர்களை நொந்த நிலைக்குத் தள்ளுவதற்குதான் தமிழக அரசின் போக்குவரத்துத் துறை உள்ளது. மக்கள் ஊர் திரும்புவதற்குள் அரசு அதிகாரிகளை செயல்பட வைத்து கட்டணக் கொள்ளையை தடுக்க வேண்டும்.” என வலியுறுத்தியுள்ளார்.