தனியார் பேருந்துகள் கோவையில் அதிக அளவில் இயக்கப்பட்டு வருகின்றன. பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரித்ததால் பேருந்து நிறுவனங்களுக்கிடையே கடும் போட்டி எழுந்துள்ளது.
தனியார் பேருந்துகள் போட்டி போட்டுக்கொண்டு ஆபத்தான முறையில் வேகமாகச் செல்வதால் அவ்வப்போது விபத்துகள் நடைபெறுகின்றன. இதனையடுத்து தனியார் பேருந்துகள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சமூக ஆர்வலர்கள் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இந்நிலையில், கோவை உக்கடத்திலிருந்து கண்ணம்பாளையத்தை நோக்கி வந்துகொண்டிருந்த 'காடேஸ்வரி' என்ற பேருந்தும், 'ராஜலட்சுமி' என்ற பேருந்தும் கூடுதல் டிக்கெட்டுகளை மனதில் வைத்து போட்டி போட்டுக்கொண்டு அதிவேகமாகப் பேருந்தை இயக்கி வந்துள்ளனர்.
சிங்காநல்லூர் அருகே இரண்டு பேருந்தின் ஓட்டுநர்களும் சாலையை அடைத்தபடி சென்றுள்ளனர். அப்போது காடேஸ்வரி பேருந்து, முன்னே சென்றுகொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. இதில், இருசக்கர வாகனத்தில் சென்றவர் படுகாயமடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
இதனால், ஆத்திரமடைந்த பொதுமக்கள் பேருந்து ஓட்டுனரை பிடித்து தாக்கியுள்ளனர். இந்த விபத்து குறித்து கோவை கிழக்கு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். போக்குவரத்து துறையும், காவல்துறையும் இணைந்து இனிமேல் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க வழிவகை செய்யவேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.