மத்திய மேற்கு வங்கக்கடலில் நிலவிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி, தற்போது வடக்கு ஆந்திராவை ஒட்டியுள்ள கடற்கரைப் பகுதியில் நிலவுகிறது.
அதுபோல, மத்திய கிழக்கு அரபிக்கடல் பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது அடுத்த 12 மணிநேரத்தில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாகவும், அதனைத் தொடர்ந்து புயலாகவும் வலுப்பெற வாய்ப்புள்ளது.
அடுத்து வரும் இரண்டு நாட்களுக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மிதமான மழை பெய்யக்கூடும். குமரி, நெல்லை, தூத்துக்குடி, ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, திருச்சி, பெரம்பலூர், அரியலூர், கடலூர், மதுரை ஆகிய 11 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
மேலும், எதிர்வரும் 3 நாட்களுக்கு மீனவர்கள் மத்திய அரபிக்கடல் பகுதிக்கு மீன்பிடிக்கச் செல்லவேண்டாம் என அறிவுறுத்திய அவர், சென்னை மற்றும் புறநகரைப் பொறுத்தவரையில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றார்.
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக கடலூரில் 15 செ.மீ மழை பதிவாகியுள்ளது.