புதுச்சேரி காமராஜ் நகர் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரம் நேற்று மாலையுடன் நிறைவு பெற்றது. முன்னதாக இறுதியாக நடைபெற்ற வாகன பிரசாரத்தில் புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி கலந்துக்கொண்டார்.
மேலும் இந்த பேரணியில் ஏராளாமான காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சியினர் கலந்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்று வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டனர்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த நாராயணசாமி, ஏனாம் நில விவகாரத்தில், தனது அதிகாரத்தை ஆளுநர் கிரண்பேடி தவறாக பயன்படுத்திவிட்டதாகவும், இதுகுறித்து நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்போவதாகவும் எச்சரித்தார்.
மேலும் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து உண்மையாக இருக்கும் போது அவரைப் பற்றி குறை கூற கிரண்பேடிக்கு தகுதியில்லை என்றும் காட்டமாக விமர்சித்தார்.
இந்நிலையில், வாகன பிரச்சாரத்தில் ஈடுபடும் போது முதல்வர் நாராயணசாமி மற்றும் தொண்டர்கள் யாரும் தலைகவசம் அணியாமல் சென்றதைக் கையில் எடுத்துக்கொண்ட கிரண்பேடி வழக்க பதிவு செய்ய இருப்பதாக கருத்து ஒன்றை ட்விட்டரில் தெரிவித்திருந்தார்.
இதுதொடர்பாக கிரண்பேடி கூறியிருப்பதாவது, ”உச்சநீதிமன்ற உத்தரவு மற்றும் உயர்நீதிமன்ற உத்தரவுகளையும் மோட்டார் வாகன சட்டத்தை முதல்வர் மீறியிருப்பது தெரிகிறது. அதனால் தவறு செய்தவர்கள் மீது சட்டபூர்வ நடவடிக்கை எடுக்க புதுச்சேரி டி.ஜி.பி. பாலாஜி ஸ்ரீவத்சவாவிற்கு உத்தரவிட்டுள்ளேன்” என தனது பதிவில் அவர் கூறியுள்ளார்.
கிரண்பேடியின் இந்த பதிவை எடுத்து, முதலவர் நாராயணசாமி ட்விட்டர் பதிவில் கிரண்பேடி ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனத்தில் பின்னால் அமர்ந்து செல்லும் புகைப்படத்தை வெளியிட்டு, “பிறருக்கு உபதேசம் செய்யும் முன்பு, தான் அதைக் கடைபிடிக்க வேண்டும்” என குறிப்பிட்டுள்ளார். அவரின் பதிவுக்கு சமூக வலைதளங்களில் ஆதரவு பெருகியுள்ளது.
இந்நிலையில் கிரண்பேடி மீது நடவடிக்கை எடுக்கும் படி, புதுச்சேரி யூனியன் பிரேதச மாணவர் கூட்டமைப்பினர் டி.ஜி.பி அலுவலகத்தில் புகார் ஒன்றைக் கொடுத்துள்ளனர்.
அதில், ”கிரண்பேடி ஹெல்மெட் அணியாமல் சென்ற புகைப்படத்தை இணைத்து, மாண்புமிகு உச்சநீதிமன்ற, உயர்நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் மோட்டார் வாகன சட்டம் அத்துமிறீய விதிமுறல் ஈடுபட்டுள்ளது நிருப்பிக்கப்பட்டுள்ளது. சட்டத்தின் ஆட்சி நிலைபெறவேண்டும்.
எனவே விதிமிறலில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கேட்டுள்ளனர்.