சென்னை நொச்சிக்குப்பத்தைச் சேர்ந்தவர் பூஜா. இவர் நேற்று இரவு பட்டினப்பாக்கத்தில் இருந்து வில்லிவாக்கம் செல்ல 27 டி என்ற பேருந்தில் தனது ஆண் நண்பருடன் பயணித்துள்ளார். பேருந்து வந்த அவசரத்தில் கையில் பணம் இருக்கும் என நினைத்து பேருந்தில் ஏறியுள்ளனர்.
பின்னர், இருவரிடமும் பணம் இல்லை என்பது தெரியவந்தது. டிக்கெட் 30 ரூபாய். ஆனால் அவர்களிடம் 20 ரூபாய் மட்டுமே இருந்துள்ளது. அதனால் தான் மட்டும் இறங்கிக் கொள்வதாக பூஜாவின் நண்பர் கூறியுள்ளார். டிக்கெட்டை கிழித்தால் மீண்டும் வாங்கிக் கொள்ளமாட்டோம் எனக் கூறி ஏற்க மறுத்துள்ளார் நடத்துனர். அதுமட்டுமில்லாமல் அவர்களை ஒருமையிலும் பேசியுள்ளார்.
மேலும், ” கையில் பணம் இல்லாமல் காதலனுடன் ஊர் சுற்ற மட்டும் தெரியுது” என வாய்க்கு வந்த வார்த்தைகளால் இருவரையும் வசைப்பாடியுள்ளார். சகபயணி ஒருவர் பூஜாவிற்கு உதவ முன் வந்துள்ளார். அவர் கொடுத்த பணத்தையும் ஏற்க முடியாது என்று கூறி, மிகவும் தரக் குறைவாக பேசியுள்ளார்.
இந்த வாக்குவாதத்தின் இடையே, பேருந்தின் கதவுகள் திறந்தபோது ஓடும் பேருந்தில் இருந்து அந்த இளைஞர் இறங்கி, அருகில் உள்ள ஏ.டி.எம் மையத்தில் பணம் எடுத்துவிட்டு ஆட்டோவில் சென்று பேருந்தை மடக்கி பிடித்துள்ளார். பின்னர் பேருந்திற்குள் சென்ற அந்த இளைஞர் டிக்கெட்டிற்கு உரிய தொகையை எடுத்துக் கொள்ளுமாறு நடத்துனரிடம் 500 ரூபாய் கொடுத்துள்ளார்.
500 ரூபாய்க்கு சில்லறை இல்லை என மீண்டும் வாக்குவாத்தில் ஈடுபட்டுள்ளார் நடத்துனர். இதனால் ஆத்திரமடைந்த பூஜா பேருந்து சென்றுக்கொண்டிருக்கும் போது அதன் கியர் கம்பியை பிடித்து இழுத்தார். இதனால் பேருந்தை இயக்கமுடியாமல் ஓட்டுனர் அதிர்ந்து நிறுத்தினார். மேலும் பேருந்தை காவல் நிலையத்திற்கு விடுமாரும் ஆவேசமாக கூச்சலிட்டுள்ளார் பூஜா.
சாலையில் பேருந்து நிறுத்தப்பட்டதை பார்த்த போக்குவரத்து போலிஸார் விரைந்து வந்து பேருந்தை சாலையின் ஓரம் நிறுத்துமாறு அறிவுறுத்தினார். பயண சீட்டு இல்லாததால் தான் திட்டியதாகவும், அதுவும் இழிவாக பேசவில்லை என விளக்கம் அளித்துள்ளார் நடத்துனர். பூஜாவும் தன் தரப்பு வாதங்களை போலிஸாரிடம் எடுத்து வைத்தார்.
இதுதொடர்பாக போக்குவரத்து போலிஸார் பயணிகளிடம் மரியாதையாக நடந்துக்கொள்ளுமாரு ஓட்டுனருக்கும் நடத்துநருக்கும் அறிவுறை வழங்கியதாகக் கூறப்படுகிறது. பின்னர் பூஜா மற்றும் அவரது நண்பரை சமதானம் செய்து அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் சுமார் ஒருமணி நேரத்துக்கும் மேல் பேருந்து நிறுத்தப்பட்டதால் பயணிகள் கடும் சிரமங்களை சந்தித்தனர்.