ராஜீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட முருகன், நளினி, சாந்தன், பேரறிவாளன், ரவிச்சந்திரன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 7 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. 7 பேரும் கடந்த 28 ஆண்டுகளுக்கும் மேலாக சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.
இந்நிலையில், 2018-ம் ஆண்டு செப்டம்பரில் 7 பேரையும் கருணை அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழக சட்டப்பேரவையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தை மத்திய அரசுக்கு அனுப்பி வைத்தும் எந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
முன்னதாக, இதுதொடர்பாக நடைபெற்ற வழக்கில் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 7 பேரின் விடுதலை குறித்து முடிவு எடுக்கும் அதிகாரம் தமிழக அரசுக்கு உண்டு என உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியது. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி 7 பேரையும் முன் விடுதலை செய்ய ஆளுநருக்கு தமிழக அரசு பரிந்துரை செய்தது.
ஆனால், ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள பேரறிவாளன் உள்பட 7 பேரை விடுவிக்க ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் மறுப்பு தெரிவித்துள்ளதாகவும், 7 பேர் விடுதலை தொடர்பாக தமிழக அமைச்சரவை நிறைவேற்றிய தீர்மானத்தை நிராகரித்துவிட்டதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.