சென்னை தண்டையார்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் பணியாற்றிய பெண் ஆய்வாளர் ஸ்ரீதேவி புற்றுநோயால் உயிரிழந்தார். அவரது உடலை பெண் போலிஸாருடன் இணைந்து சுமந்து சென்று வண்ணாரப்பேட்டை துணை ஆணையாளர் சுப்புலட்சுமி இறுதி மரியாதை செலுத்தினார்.
சென்னை வண்ணாரப்பேட்டை சிங்காரத் தோட்டம் காவலர் குடியிருப்பில் வசித்து வந்தவர் ஸ்ரீதேவி (49). இவர் தண்டையார்பேட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் ஆய்வாளராக பணிபுரிந்து வந்தார். ஸ்ரீதேவியின் கணவர் முருகன் (55). இவர்களுக்கு 6 வயதுடைய வர்ஷினி என்ற பெண் குழந்தை உள்ளது.
கடந்த நான்கு மாதங்களுக்கு முன்பு உடல்நிலை சரியில்லை என்று விடுப்பு எடுத்துக்கொண்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார் ஸ்ரீதேவி. அப்போது அவருக்கு வயிற்றில் புற்றுநோய் இருப்பதாக மருத்துவர்கள் கூறினர்.
சிகிச்சை பெற்று வந்தவர் ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் சிகிச்சை அளித்தாலும் பயனில்லை என்று மருத்துவர்கள் கூறியதன் பெயரில் ஸ்ரீதேவியை வீட்டுக்கு அழைத்து வந்தனர். இந்நிலையில், ஸ்ரீதேவி கடந்த 12ம் தேதி உடல்நலம் குன்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த உடன் பணிபுரிந்த காவலர்கள் அவருக்கு அஞ்சலி செலுத்தினர். இறுதி ஊர்வலத்தின்போது ஆய்வாளருக்கு மரியாதை செய்யும் வகையில் வண்ணாரப்பேட்டை துணை ஆணையாளர் சுப்புலட்சுமி தலைமையில் பெண் போலிஸாரே ஸ்ரீதேவியின் உடலை சுடுகாட்டிற்கு சுமந்து சென்று அடக்கம் செய்தனர்.
இந்த நிகழ்வு பொதுமக்கள் மத்தியில் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.