நெல்லை மாவட்டம் உவரி அருகே கூட்டப்பனை கிராமத்தைச் சேர்ந்த லிவங்ஸ்டன் - வினிட்டா தம்பதியரின் மூன்றாவது மகள் அதே பகுதியில் உள்ள நடுநிலைப்பள்ளி ஒன்றில் 7ம் வகுப்பு படித்து வந்தார். இந்நிலையில் கடந்த 15-ம் தேதி பள்ளி முடித்துவிட்டு வந்த சிறுமி விளையாடச் சென்றுள்ளார்.
ஆனால் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. அருகில் உள்ள வீடுகளில் தேடிய பெற்றோர் வழக்கம்போல அருகில் உள்ள சித்தப்பா வீட்டுக்குச் சென்றிருப்பார் என நினைத்தார்கள். ஆனால் அங்கு அவர் வரவில்லை எனத் தெரிந்ததும் மறுநாள் உவரி காவல்நிலையத்தில் புகார் கொடுத்தனர். புகாரைப் பெற்றுக்கொண்ட போலிஸார் அப்பகுதியில் விசாரணையை மேற்கொண்டனர்.
அப்போது அவர்களது வீட்டுக்கு அருகே உள்ள வீட்டின் காம்பவுண்டுக்குள் சிறுமி உடலில் காயங்களுடன் அரை நிர்வாண கோலத்தில் பிணமாகக் கிடந்துள்ளார். இதனைப் பார்த்த போலிஸார் மற்றும் குடும்பத்தினர் அதிர்ச்சி அடைந்தனர்.
சிறுமி கொலை செய்யப்பட்டுக் கிடந்த வீட்டில் நீண்ட நாட்களாக யாரும் இல்லை எனக் கூறப்படுகிறது. அந்த வீட்டின் உரிமையாளர் திருச்சி அருகேயுள்ள இலுப்பூர் பள்ளியில் தலைமை ஆசிரியராகப் பணியாற்றி வந்துள்ளார். அதனால் இங்குள்ள வீட்டில் யாரும் வசிக்கவில்லை. அது தெரிந்தவர்கள் தான் கேட் பூட்டை உடைத்து சிறுமியை உள்ளே கொண்டு சென்றிருக்கிறார்கள் என போலிஸார் சந்தேகிக்கின்றனர்.
சிறுமியின் சடலத்தை மீட்டு நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு பிரேத பரிசோதைக்காக அனுப்பி வைத்தனர். சிறுமியின் உடலில் காயங்கள் இருந்ததாலும், ஆடைகள் களையப்பட்டு இருந்ததாலும் பாலியல் வன்கொடுமை செய்து சிறுமியைக் கொன்றிருக்கலாம் என்ற கோணத்தில் போலிஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணையின் போது, இரண்டு வாலிபர்கள் மீது சந்தேகம் இருப்பதாக ஊர் மக்கள் தெரிவிக்க அவர்களைப் பிடித்த போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் தான் சிறுமி பாலியல் வன்கொடுமை செய்து உயிரிழந்துள்ளாரா என்ற முழுமையான தகவல் தெரியவரும் என போலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தக் கொடூர சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.