குரூப் 2 தேர்விற்கான புதிய பாடத்திட்டத்தை ரத்து செய்து, பழைய முறையிலேயே தேர்வை நடத்த உத்தரவிட கோரிய வழக்கில் மனுவை தமிழக அரசு பரிசீலனை செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த அப்பாஸ் மந்திரி என்பவர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் பொதுநல வழக்கு ஒன்று தாக்கல் செய்திருந்தார். அதில், "குரூப் 2 தேர்வுகளுக்கான பாடத்திட்டத்தில் சமீபத்தில் தமிழகத்தில் அரசு மாற்றம் கொண்டு வந்தது. இதில் புதிய பாடத்திட்டத்தின் படி, 175 வினாக்கள் பொது அறிவிலிருந்தும், 25 வினாக்கள் கணிதத்திலிருந்தும் கேட்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள், மாற்றுத்திறனாளிகள் குரூப் 2 தேர்விற்காக தயார் செய்து வரும் நிலையில், பழைய பாடத்திட்டத்தில் உள்ள 100 மதிப்பெண்ணிற்கான தமிழ் வினாக்கள் அகற்றப்பட்டதால், அவர்கள் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவார்கள். அதேபோ் குரூப் 2 மெயின் தேர்வில், 100 மதிப்பெண்களுக்கு தமிழிலிருந்து ஆங்கிலத்திற்கும், ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் மொழி பெயர்க்கும் வகையில் வினாக்கள் அமைக்கப்பட்டுள்ளது
இது கிராமப்புறத்தைச் சேர்ந்த மாணவர்களை பெருமளவில் பாதிக்கும். ஆகவே, குரூப் 2 தேர்விற்கான புதிய பாடத்திட்டத்தை ரத்து செய்து, பழைய முறையிலேயே தேர்வை நடத்த உத்தரவிட வேண்டும்" என கூறியிருந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் சிவஞானம், கிருஷ்ணன் ராமசாமி அமர்வு, மனு குறித்து தமிழக அரசு பரிசீலனை செய்ய உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தனர்.