பொது இடங்களில் சாதி, மதக் குறியீடுகளை குறிப்பிடும் வகையில் எந்த போஸ்டரும், ஸ்டிக்கரும் ஒட்டக்கூடாது என ராஜஸ்தான் மாநிலத்தில் ஒரு சட்டமே இயற்றப்பட்டுள்ளது.
அதில், வாகனங்களில் பேனட் மற்றும் நம்பர் ப்ளேட் உள்ளிட்ட பகுதிகளில் சாதி, மத அடையாளங்களை குறிக்கும் புகைப்படங்களோ, ஸ்டிக்கரோ இடம்பெற்றிருந்தால் 5,000 ரூபாய் வரை அபராதம் விதிக்கப்படும் என அம்மாநில போக்குவரத்துத் துறை எச்சரித்துள்ளது. அதுமட்டுமல்லாமல் வன்முறைகளை கிளப்பும் விதமாக வாசகங்கள் இருந்தால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறு இருக்கையில், தமிழகத்தில் உள்ள அரசு பேருந்து ஒன்றில் மத அடையாளங்களை குறிப்பிடும் வகையில் இந்துக் கடவுள்களில் ஒன்றான ஹனுமனின் புகைப்படமும், Jai Hanuman என்ற வாசகமும் இடம்பெற்றுள்ளது.
பொதுவாக தனியார் பேருந்துகளில்தான் இதுபோன்று ஸ்டிக்கர்களும், வாசகங்களும் இடம்பெற்றிருக்கும். ஆனால் இங்கு மாநில அரசுக்குச் சொந்தமான அரசுப் பேருந்துகளில் இதுபோன்று மத அடையாளங்களை குறிக்கும் படம் இடம்பெற்றுள்ளது.
மதச்சார்பின்மைக்கும், மத நல்லிணக்கத்துக்கும் பெயர் பெற்ற மாநிலமான தமிழகத்தில் மாநில அரசின் பேருந்துகளில் இதுபோன்று குறிப்பிடப்பட்டுள்ளது காண்போரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
நாடு முழுவதும் இந்துக்களுக்கு மட்டுமே முக்கியத்துவம் அளிக்கும் வகையில் பா.ஜ.க அரசும் ஆர்.எஸ்.எஸ்ஸும் திட்டமிட்டு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வரும் நிலையில், தமிழகத்தில் ஆட்சி புரியும் அ.தி.மு.க அரசுக்கு பா.ஜ.க நிழலாக இருந்து இந்துத்துவத்தை தூக்கிப்பிடிப்பதையே இந்தச் செயல் எடுத்துரைக்கிறது என அரசியல் நோக்கர்கள் தெரிவிக்கின்றனர். தற்போது இந்தப் புகைப்படம் ட்விட்டர் போன்ற சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.