கரூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவர் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்துள்ளார். அவரது மனைவி வசந்தாமணி. இவர்களுக்கு பாஸ்கர் மற்றும் சரண்யா என இரு பிள்ளைகள் உள்ளனர். இந்நிலையில் பாஸ்கருக்கு நவம்பர் வரும் 1ம் தேதி திருமணம் நடைபெறுவதாக நிச்சயிக்கப்பட்டு இருந்தது.
அதனையடுத்து திருமண வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டிருந்து வந்துள்ளனர். இந்நிலையில், திருப்பூர் மாவட்டம் வெள்ளக்கோவில் பகுதியில் உள்ள உத்தண்டகுமாரவலசு கிராமத்தில் வசித்துவரும் தனது மூத்த அக்கா கண்ணம்மாளுக்கு அழைப்பிதழ் கொடுக்க செல்வராஜும், வசந்தாமணியும் சென்றுள்ளனர். பின்னர், அவர்கள் வீடு திரும்பவில்லை.
இந்நிலையில், கரூர் - மதுரை புறவழிச்சாலையில் கார் ஒன்று கேட்பாரற்றுக் கிடந்துள்ளது. இதைப்பார்த்த நெடுச்சாலைத் துறையினர் போலிஸாருக்கு தகவல் கொடுத்து வரவழைத்து காரை சேதனை செய்தனர். அப்போது காரின் உட்பகுதியில் மிளகாய்ப் பொடி தூவப்பட்டுக் கிடந்துள்ளது. மேலும், காரில் இருந்த அழைப்பிதழின் மூலம் அது நிதி நிறுவன அதிபர் செல்வராஜின் கார் என்பதை போலிஸார் உறுதிப்படுத்தினர்.
பின்னர் செல்வராஜ் குடும்பத்தினருக்கு தான்தோன்றிமலை காவல்துறையினர் தகவல் கொடுத்தனர். தகவலறிந்து வந்த குடும்பத்தினரிடம் விசாரித்தபோது, திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக திருப்பூரில் உள்ள உறவினர் வீட்டுக்கு அவர்கள் சென்றதாக தெரிவித்துள்ளனர்.
இதனையடுத்து திருப்பூர் விரைந்த போலிஸார் கண்ணம்மாளின் வீட்டிற்கு சென்றனர். அங்கு வீடு பூட்டப்பட்டு ஆள் நடமாட்டம் இல்லாமல் இருந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த போலிஸார் வீட்டின் பின்புறத்திற்குச் சென்றபோது புதிதாக தோண்டப்பட்டு மண் மூடியிருந்த குழியை ஆய்வு செய்தனர்.
அந்தக் குழியில் கழுத்து அறுபட்ட நிலையில் செல்வராஜ் மற்றும் அவரது மனைவி ஆகியோர் சடலமாகக் கிடந்துள்ளனர். இதனால் அதிர்ச்சியடைந்த போலிஸார் இரவோடு இரவாக தேடி கண்ணம்மாள் மற்றும் அவரது மருமகன் நாகேந்திரன் ஆகியோரை கைது செய்துள்ளனர்.
இதனிடையே புதைக்கப்பட்ட சடலத்தைத் தோண்டி எடுத்து ஆய்வு செய்து வருகின்றனர். இதில் கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.
கண்ணம்மாள், செல்வராஜ் ஆகியோரின் தந்தையான காளியப்பன், தனக்குச் சொந்தமான 4 ஏக்கர் நிலத்தை மகன் செல்வராஜ் பெயரில் எழுதிவைத்ததாகவும் அந்த நிலத்தை 43 லட்ச ரூபாய்க்கு செல்வராஜ் விற்றதாகவும் கூறப்படுகிறது. அந்த 43 லட்ச ரூபாயில் கண்ணம்மாள் பங்கு கேட்டபோது கொடுக்க மறுத்த செல்வராஜ், ஒரு லட்ச ரூபாய் மட்டுமே கொடுத்ததாகக் கூறப்படுகிறது.
பங்கு கிடைக்காத ஆத்திரத்தில் இருந்த கண்ணம்மாள், அழைப்பிதழ் கொடுக்க வந்த தம்பியையும் அவரது மனைவியும் மருமகன் நாகேந்திரனுடன் சேர்ந்து தலையில் அம்மிக் கல்லைப் போட்டு கொலை செய்து புதைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தக் கொலைச் சம்பவத்தால் குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர்.