தமிழ்நாடு

முதலில் பைக்... அப்புறம் கார் : ‘சதுரங்க வேட்டை’ கும்பலிடம் ரூ.55,000 இழந்த விவசாயி - அதிர்ச்சி தகவல்!

சதுரங்க வேட்டை சினிமா பட பாணியில் விவசாயியை ஏமாற்றி ரூ.55 ஆயிரத்தைப் பறித்த மோசடி கும்பல் வசமாகச் சிக்கியது.  

முதலில் பைக்... அப்புறம் கார் : ‘சதுரங்க வேட்டை’ கும்பலிடம் ரூ.55,000 இழந்த விவசாயி - அதிர்ச்சி தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
பி.என்.எஸ்.பாண்டியன்
Updated on

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே உள்ள சிலட்டூரை சேர்ந்தவர் தங்கராசு (வயது 45), விவசாயி. ஓரிரு தினங்களுக்கு முன்பு, இவர் வீட்டில் இருந்தபோது நெல்லை மாவட்டம் சங்கரன்கோவிலைச் சேர்ந்த காந்தீஸ்வரன் (32), பேச்சிமுத்து (40) ஆகியோர் வந்தனர்.

அவர்கள் தங்கராசுவிடம், நாங்கள் சோப்பு வியாபாரம் செய்கிறோம். எங்களிடம் சோப்பு வாங்கினால் அதில் ஒரு கூப்பன் இருக்கும். அந்த கூப்பனில் எந்தப் பொருள் உள்ளதோ, அதனை பரிசாக வழங்குவோம் என்று கூறினர்.

இதையடுத்து தங்கராசு, சோப்பு ஒன்றை வாங்கி, அதில் இருந்த கூப்பனை பிரித்து பார்த்தபோது அதில் ஸ்டவ் அடுப்பு இருந்தது. இதனால் மகிழ்ச்சியடைந்த தங்கராசுவுக்கு, காந்தீஸ்வரனும், பேச்சிமுத்துவும் ஸ்டவ் அடுப்பை பரிசாக வழங்கினர். மேலும் அவரிடம், இந்த பரிசுக்கு மற்றொரு பரிசு உண்டு என்று தெரிவித்ததுடன், அதில் உங்களுக்கு மோட்டார் சைக்கிள் விழுந்துள்ளது என்றனர்.

ஸ்டவ் அடுப்பை பரிசாக தந்ததால் மோட்டார் சைக்கிளையும் தந்து விடுவார்கள் என்று எண்ணிய தங்கராசுவிடம், 2 பேரும் மோட்டார் சைக்கிள் பெற வேண்டுமென்றால் அதற்கு வரியாக ரூ.10 ஆயிரம் நீங்கள் கட்ட வேண்டும். அதற்கான பணத்தை தந்தால் நாங்கள் நாளையே உங்களுக்கு மோட்டார் சைக்கிளை கொண்டு வந்து தருவோம் என்றனர்.

Representational image
Representational image

அவர்களது பேச்சில் மயங்கிய தங்கராசு ரூ.10 ஆயிரத்தை வழங்கினார். அதனை பெற்றுக்கொண்ட 2 பேரும், பிறகு மறுநாள் தங்கராசு வீட்டிற்கு வந்தனர்.

அப்போது தங்கராசுவிடம், உங்களுக்கு மோட்டார் சைக்கிளை விட கார் பரிசாக தருகிறோம். ஏனென்றால் ஒருவருக்கு கார் பரிசு விழுந்துள்ளது. ஆனால் அவர் அதற்கான வரி ரூ.45 ஆயிரத்தை கட்ட முடியாது என்று கூறிவிட்டதால், அந்த காரை நாங்கள் உங்களுக்கு பரிசாக தருகிறோம். அதற்கு நீங்கள் வரியாக ரூ.45 ஆயிரம் செலுத்தவேண்டும் என்று கூறியுள்ளனர். தங்கராசுவைப் பற்றி முழுமையாக தெரிந்து கொண்ட இந்த இருவரும், அவருக்கு அளவுக்கு அதிகமாக ஆசையை காட்டினர். இந்த ஆசை வார்த்தைகளுக்கு மயங்கிய தங்கராசு, ரூ.45 ஆயிரத்தை அவர்களிடம் கொடுத்தார்.

அதனைப் பெற்றுக்கொண்ட இருவரும் , நாளை உங்களுக்கு காரை பரிசாக தருகிறோம் என்று தெரிவித்துவிட்டுச் சென்றுவிட்டனர்.

மறுநாள் தங்கராசுவை தொடர்பு கொண்டு பேசிய காந்தீஸ்வரன், பேச்சிமுத்து, நாங்கள் உங்களுக்கு பரிசாக தர காரில் வந்து கொண்டிருந்தோம். ஆனால் வழியில் சோதனை நடத்திய போலிசார், காருக்கான ஆவணங்களை கேட்டனர். புதிய கார் என்பதால் எங்களிடம் ஆவணங்கள் இல்லை.

எனவே அதற்கு அபராதமாக ரூ.20,000 செலுத்திவிட்டு செல்லுங்கள் என்று இன்ஸ்பெக்டர் கூறுகிறார். நாங்கள் அவ்வளவு பணம் எடுத்துவரவில்லை. நீங்கள் அந்த பணத்தை தந்தால் நாங்கள் காரை கொண்டு வந்து விடுவோம். பணத்தை நேரில் வந்து கொடுத்தாலும் சரி அல்லது வங்கி கணக்கில் செலுத்தினாலும் சரி, உங்களுக்கு எப்படி வசதிப்படுகிறதோ? அதுபோல் செய்யுங்கள் என்றனர். தன்னிடம் தொடர்ந்து பணம் கேட்டது தங்கராசுவுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது.

Sathuranga Vettai movie
Sathuranga Vettai movie

இதுகுறித்து அறந்தாங்கி போலிஸாரிடம் புகார் செய்தார். உடனே மோசடி கும்பலை கையும், களவுமாகப் பிடிக்க நினைத்த போலிஸார் தங்கராசுவிடம் நீங்கள் ரூ.20 ஆயிரத்தை கையில் எடுத்துச் சென்று கொடுங்கள். நாங்கள் பின்னால் வந்து மடக்கிப் பிடிக்கிறோம் என்று கூறி அனுப்பி வைத்தனர்.

அதன்படி தங்கராசு ரூ.20 ஆயிரம் பணத்தை எடுத்துக்கொண்டு, காந்தீஸ்வரன், பேச்சிமுத்து ஆகியோர் நின்ற பகுதிக்கு சென்று பணத்தை கொடுக்க இருந்தார். அப்போது அங்கு வந்த போலிஸார் 2 பேரையும் மடக்கி பிடித்தனர். பின்னர் அவர்களை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.

‘சதுரங்கவேட்டை’ சினிமா பட பாணியில் அறந்தாங்கி விவசாயியிடம் சோப்பு வாங்கினால் கார், மோட்டார் சைக்கிள் வழங்குவதாக கூறி ஆசையை தூண்டிவிட்டு பண மோசடியில் ஈடுபட்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories