சென்னையை அடுத்த திருமுல்லைவாயிலைச் சேர்ந்தவர் கோவிந்தசாமி. இவரது மனைவி சுப்பம்மாள். இவர்களுக்கு இரண்டு மகன்களும் மூன்று மகள்களும் உள்ளனர். விடுமுறை என்பதால் கோவிந்தசாமியின் மகள் கல்யாணி அவரது இரு மகள்களை அழைத்துக்கொண்டு தந்தை வீட்டிற்குச் சென்றுள்ளார்.
இந்நிலையில், கல்யாணியின் கணவர் ஆறுமுகம் தனது மனைவி குழந்தைகளை பார்ப்பதற்காக திருமுல்லைவாயிலில் உள்ள தனது மாமனார் வீட்டுக்கு வந்துள்ளார். ஆறுமுகம் தனது மாமனார் வீட்டுக்குள் நுழைந்தபோது வீட்டில் உள்ள அனைவரும் மயங்கிக் கிடப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
விஷம் அருந்தி கோவிந்தசாமி, சுப்பம்மாள், நாகராஜ், ரவி ஆகிய 4 பேர் உயிரிழந்த நிலையில் கிடந்துள்ளனர். மேலும் கல்யாணி, சர்வேஸ்வரி, யோகப்ரியா ஆகிய 3 பேரும் மிகவும் ஆபத்தான நிலையில் இருப்பதைக் கண்ட ஆறுமுகம் அக்கம்பக்கத்தினர் உதவியுடன் அவர்களை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார்.
பின்னர் தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலிஸார் விஷம் அருந்திய 4 பேரின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்நிலையில் போலிஸாரின் விசாரணையில், மகள்கள், மகன்களின் திருமணத்துக்காக கோவிந்தசாமி, தனியார் நிதி நிறுவனத்தில் வீட்டை அடமானம் வைத்து ரூ.60 லட்சம் கடன் வாங்கியிருந்தார். கடந்த சில மாதங்களாக வேலை இல்லாததால் கோவிந்தசாமியால் தவணையைச் சரிவர செலுத்த முடியவில்லை.
மேலும், குடும்பச் செலவுக்காக கடனுக்கு மேல் கடன் வாங்கினார். தன்னுடைய கடைசி மகளிடம் தங்க நகைகள் மற்றும் ஒரு லட்சம் ரூபாயை கோவிந்தசாமி கடனாக வாங்கியிருந்தார். அவருக்கு தனிப்பட்ட முறையில் சில லட்சங்கள் கடன் இருப்பதும் தெரியவந்துள்ளது.
இதனால் கோவிந்தசாமி வீட்டில் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் அவரது இரண்டு மருமகள்களும் வீட்டைவிட்டு வெளியேறி தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டதாகக் கூறப்படுகிறது.
மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த கல்யாணி மற்றும் அவரது குழந்தைகளும் தற்போது நலமாக உள்ளனர். இதையடுத்து, போலிஸாரிடம் கல்யாணி வாக்குமூலம் அளித்துள்ளார்.
அதில் கூறியிருப்பதாவது, ''எங்களின் திருமணச் செலவுகளுக்காகத்தான் வீட்டை அடமானம் வைத்து அப்பா கடன் வாங்கியிருந்தார். அவருக்குச் சில ஆண்டுகளாக வேலை இல்லை. இதனால் வாங்கிய கடனுக்கு வட்டி கட்ட முடியவில்லை.இதனால் அதற்காகவும் அப்பா கடன் வாங்கினார்.
கடன் தொகையைச் செலுத்த முடியாமல் தவித்த அப்பாவுக்கு குடும்பத்தில் நடந்த சில நிகழ்வுகள் கடும் மனவருத்தத்தை ஏற்படுத்தியது. கடந்த 12ம் தேதி அம்மா உணவு சமைத்திருந்தார். அனைவரும் சேர்ந்து சாப்பிட வீட்டில் அமர்ந்தோம்.
அப்போதுதான் அப்பா அந்த முடிவைச் சொன்னார். `இதற்கு மேல் கடனோடு வாழ எனக்கு மனம் இல்லை. அதனால் தற்கொலை செய்ய முடிவு எடுத்துள்ளேன். என் முடிவுக்குச் சம்மதிப்பவர்கள் இந்த விஷம் கலந்த உணவைச் சாப்பிடலாம்' என்று கூறியபடி அப்பா முதலில் சாப்பிட்டார்.
அதன்பிறகு வரிசையாக அம்மா, அண்ணன்கள் என அனைவரும் அந்த விஷம் கலந்த உணவைச் சாப்பிட்டனர். அவர்கள் அனைவரும் சாப்பிட்டபிறகு நானும் என் குழந்தைகளும் சாப்பிட்டோம். சிறிது நேரத்தில் ஒவ்வொருவராக மயங்கிவிழுந்தனர். நானும் மயங்கிவிட்டேன். கண்விழித்தபோது ஆஸ்பத்திரியில் இருந்தேன். நானும் என் குழந்தைகளும் எப்படி உயிர் பிழைத்தோம் என தெரியவில்லை'' என்று கூறியுள்ளார்.
கடன் பிரச்னையால், குடும்பமே விஷம் அருந்திய சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.