சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை உள்ள நாச்சியார்புரத்தைச் சேர்ந்தவர்கள் ஆறுமுகம், செல்லாயி தம்பதி. இவர்கள் 40 ஆண்டுகளுக்கு மேலாக கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்களுக்கு முத்து, சோனை முத்து என இரண்டு மகன்கள் உள்ளனர். அதில் மூத்த மகன் முத்து பார்வையற்ற மாற்றுத்திறனாளி.
இரண்டாவது மகன் சோனை கடந்த 2016-ம் ஆண்டு அப்பகுதியைச் சேர்ந்த சிறுமி ஒருவரை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த வழக்கில் சிறையில் இருந்து விட்டு தற்போது தான் ஜாமினில் வெளிவந்துள்ளார். ஜாமினில் வெளிவந்த பிறகு திருமணம் நடந்து அவரது மனைவி கர்ப்பமாக உள்ளார்.
இந்நிலையில், மது போதைக்கு அடிமையாகி வேலைக்கு எங்கும் செல்லாமல் வீட்டிலேயே இருந்துள்ளார் சோனை. இவரின் செயல்பாடுகளால் அடிக்கடி சண்டை வருவது வழக்கமாக இருந்துள்ளது.
மேலும் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு சோனையின் தந்தை உயிரிழந்தார். இயற்கையாகத் தான் அவர் உயிரிழந்தார் எனக் கூறி சடங்கு செய்து ஊரார் முன்னிலையில் அடக்கம் செய்யப்பட்டது.
அதனைத் தொடர்ந்து கடந்த அக்டோபர் 6-ம் தேதி சோனையின் தாயும் உயிரிழந்தார். அவரது தாய்க்கு குடிப்பழக்கம் இருந்ததால் உடல் நலம் பாதிக்கப்பட்டு இறந்துவிட்டதாக கூறி அடக்கம் செய்துள்ளார் சோனை. இந்நிலையில் சோனையின் சகோதரர் முத்து, தனது தாய்க்கு குடிப்பழக்கம் இல்லையெனவும், அவரது மரணத்தில் சந்தேகம் உள்ளதாகவும் ஊர் தலைவர்கள் முன்னிலையில் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து சகோதனை தாக்க முன்ற சோனையின் நடவடிக்கையின் மீது சந்தேகமடைந்து ஊர் மக்கள் தேவகோட்டை காவல் நிலையைத்தில் சோனையின் மீது புகார் கொடுத்தனர். புகாரைப் பெற்றுக்கொண்ட போலிஸார் சோனையை கைது செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில் தந்தையையும், தாயையும் திட்டமிட்டு கொலை செய்ததாக சோனை ஒப்புக்கொண்டுள்ளார்.
விசாரணையில் சோனை அளித்த வாக்குமூலத்தில், சோனையின் தந்தைக்கு 16 சென்ட் நிலம் இருந்துள்ளது. அந்த நிலத்தில் 6 சென்ட்டை திருச்சி - ராமேஸ்வரம் நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிக்காக அரசு கையப்படுத்தி, அதற்கான இழப்பீடாக 7 லட்சம் ரூபாயை ஆறுமுகத்தின் வங்கி கணக்கில் கடந்தாண்டு செலுத்தப்பட்டது.
இந்த இழப்பீடு தொகையும் மீதமுள்ள 10 சென்ட் நிலத்தையும் கேட்டு அடிக்கடி சோனை தந்தையிடன் சண்டையிட்டு வந்துள்ளார். ஆனால் ஒழுங்காக வேலைக்கு செல்லாமல் மது போதையில் ஊர் சுற்றித்திரிவதால் அவரது தந்தை பணத்தையும் நிலத்தையும் தரமறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த சோனை திட்டமிட்டு அவர்களது தோட்டத்தில் ஆள் நடமாட்டம் இல்லாத நேரங்களில் அடித்துக் கொன்றுள்ளார். பின்னர் இயற்கையாக உயிரிழந்ததாக ஊரை நம்பவைத்துள்ளார். பின்னர் தாயும் சொத்து தரமாட்டார் என எண்ணி 6 மாதங்களுக்குப் பிறகு அவரை கொலை செய்துவிட்டு அவர் குடிப்பழக்கத்தால் உயிரிழந்ததாக நாடகமாடியுள்ளார்.
இது தொடர்பாக போலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். சொத்துக்காக தந்தை தாயை மகனே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.