நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த மாணவர் உதித் சூர்யா, அவரது தந்தை மருத்துவர் வெங்கடேசன் ஆகியோர் சிபிசிஐடி போலிஸாரிடம் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்டவர்கள் வரிசையாகச் சிக்கி வருகின்றனர்.
எஸ்ஆர்எம் கல்லூரியைச் சேர்ந்த மாணவன் ராகுல் அவரது தந்தை டேவிஸ், சென்னை பாலாஜி மருத்துவக் கல்லூரியைச் சேர்ந்த மாணவர் பிரவீன் அவரது தந்தை சரவணகுமார், தர்மபுரி அரசு மருத்துவக் கல்லூரி மாணவன் இர்பான் அவருடைய தந்தை முகமது சபி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இதனை தொடர்ந்து நீட் தேர்வு ஆள் மாறாட்ட வழக்கில் மேலும் ஒரு மாணவியிடம் சிபிசிஐடி போலிஸார் விசாரணை நடத்தியுள்ளனர்.
சென்னை சவிதா மருத்துவக் கல்லூரி மாணவி பிரியங்கா ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதி மருத்துவக் கல்லூரியில் சேர்ந்ததாக புகார் எழுந்தது. இதனையடுத்து தேனி சி.பி.சி.ஐ.டி போலிஸார் மாணவியையும் அவரது தாயாரையும் நேற்று இரவு தேனிக்கு அழைத்து வந்து சிபிசிஐடி போலிஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இன்று காலை முதல் மாணவி பிரியங்காவிடம் தொடர்ந்து கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தி வருகின்றனர். மாணவியின் சான்றிதழ்கள் அனைத்தையும் வாங்கி சரிபார்த்த அதிகாரிகள் அவர் மருத்துவக் கல்லூரியில் சேர எவ்வளவு பணம் கொடுத்தார் எனவும் புரோக்கர்கள் யாரையேனும் அணுகினாரா என்றும் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.