கர்ப்பிணிகளுக்கும் குழந்தைகளுக்கும் ஊட்டச்சத்து குறைபாடுகளைப் போக்க தமிழக அரசு சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத்துறை சார்பில் அங்கன்வாடி மையங்கள் மூலம் இணை உணவாக சத்துணவு மாவு வழங்கப்பட்டு வருகிறது.
விருதுநகர் மாவட்டத்தில் 1,502 அங்கன்வாடி மையங்கள் மூலம் மாவட்டத்தில் உள்ள கர்ப்பிணிகள் மற்றும் 5 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 215 மெட்ரிக் டன் சத்துமாவு மாதந்தோறும் விநியோகம் செய்யப்படுகிறது.
அவ்வாறு இருக்கையில், கர்ப்பிணிகள் மற்றும் குழந்தைகளுக்கு வழங்கப்படும் இணை உணவு தரமில்லாமல் கொடுக்கப்படுவது மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சத்துமாவு பாக்கெட்டுகள் தயாரிக்கப்பட்ட நாளிலிருந்து 4 மாதங்கள் வரை மட்டுமே பயன்படுத்த உகந்தவை. அதனால் ஒவ்வொரு சத்துமாவு பாக்கெட்டிலும் அது தயாரிக்கப்பட்ட மாதம், காலாவதியாகும் மாதம் குறிப்பிடப்பட்டிருக்கும்.
ஆனால், கடந்த ஜூலை மாதம் தயாரிக்கப்பட்டு நடப்பு அக்டோபர் மாதம் வரை பயன்படுத்த உகந்ததாக குறிப்பிடப்பட்டுள்ள சத்துணவு மாவு பாக்கெட்டுகளிலும் புழு, வண்டு இருப்பதைக் கண்டு கர்ப்பிணிகளும், தாய்மார்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர். பலர் அங்கவாடியில் புழு, வண்டுடன் கொடுக்கப்பட்ட சத்துணவு மாவு பாக்கெட்டுகளைத் திருப்பிக் கொடுத்து வருகின்றனர்.
இதுகுறித்து, விருதுநகர் மாவட்ட சமூக நலத்துறை அலுவலரும் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலருமான ராஜம் கூறுகையில், ''இதுபோன்ற குறைபாடுகள் இருப்பது குறித்து இதுவரை எந்தப் புகாரும் எங்களுக்கு வரவில்லை. அவ்வாறு குறைபாடு இருப்பது தெரிந்தால் உடனடியாக குறிப்பிட்ட அங்கன்வாடியில் உள்ள அனைத்து சத்துணவு மாவுப் பாக்கெட்டுகள் ஆய்வு செய்யப்பட்டு திரும்பப் பெறப்பட்டு புதிய சத்துணவு மாவு வழங்கப்படும்'' என்றார்.