நர்ஸிங் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் பா.ஜ.கவின் சிவகங்கை மாவட்ட கலை மற்றும் கலாசார பிரிவு தலைவரும், நர்ஸிங் கல்லூரி தாளாளருமான சிவகுரு துரைராஜ் கைது செய்யப்பட்டுள்ளார்.
சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த இளம்பெண்ணுக்கும், சென்னையைச் சேர்ந்த இளைஞருக்கும் கடந்த மாதம் 11ம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்நிலையில், புதுமணப்பெண்ணுக்கு தொடர்ந்து வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல்நலக்குறைபாடு ஏற்பட்டது.
இதையடுத்து, மாப்பிள்ளை வீட்டார் அப்பெண்ணை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். இதனையடுத்து மருத்துவப் பரிசோதனை மேற்கொண்டதில் அப்பெண் 3 மாத கர்ப்பமாக இருப்பது தெரியவந்துள்ளது. இந்தத் தகவல் இரு வீட்டாரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதையடுத்து, அப்பெண்ணிடம் விசாரித்ததில், தான் சிவகங்கையில் தனியார் நர்ஸிங் கல்லூரியில் படிக்கும்போது, தனக்கு கூடுதல் மதிப்பெண் வழங்கி தேர்ச்சி பெற வைப்பதாகக் கூறி கல்லூரி தாளாளர் சிவகுரு துரைராஜ் தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக இளம்பெண் கூறியுள்ளார்.
மேலும், இதுகுறித்து வெளியே கூறினால் கொலை செய்து விடுவேன் என கல்லூரி தாளாளர் தன்னை மிரட்டியதாகவும் இளம்பெண் தெரிவித்துள்ளார். இதையடுத்து அப்பெண்ணின் குடும்பத்தினர் சிவகங்கை மகளிர் போலிஸில் புகார் அளித்தனர்.
விசாரித்த போலிஸார், நர்ஸிங் கல்லூரி தாளாளர் சிவகுரு துரைராஜை கைது செய்தனர். பாலியல் குற்றத்தில் ஈடுபட்டதால் கைதுசெய்யப்பட்ட சிவகுரு துரைராஜ் பா.ஜ.க மாவட்ட கலை மற்றும் கலாச்சார பிரிவின் தலைவராக இருப்பது குறிப்பிடத்தக்கது.
தொடர்ந்து, சிவகுரு துரைராஜ் வேறு மாணவிகளையும் தனது அதிகாரத்தைப் பயன்படுத்தி வன்கொடுமை செய்துள்ளாரா என்கிற கோணத்தில் போலிஸார் விசாரித்து வருகின்றனர்.