இருநாடுகள் இடையே பரஸ்பர ஒத்துழைப்பு மேம்படுத்தப்பட உறுதி! - பிரதமர் மோடி
இந்தியாவில் அளிக்கப்பட்ட உற்சாக வரவேற்பு மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது! - ஜின்பிங்
“இருநாட்டு உறவுகளில் ஏற்படும் முன்னேற்றம் சீன மக்களுக்கு மிகுந்த நன்மையை ஏற்படுத்தும். மேலும், கடந்த ஆண்டு பிரதமர் மோடியுடன் நடத்திய பேச்சுவார்த்தையை தொடர்ந்து மீண்டும் அவரை சந்தித்துள்ளேன். பிரதமர் மோடியுடன் மிகவும் ஆக்கப்பூர்வமான விவாதத்தை நடத்தியுள்ளேன்” என ஜி ஜின்பிங் தெரிவித்துள்ளார்.
சென்னை அடுத்த கோவளத்தில் உள்ள கடற்கரை ஓட்டலில் பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் இடையிலான 50 நிமிட கலந்துரையாடல் நிறைவு பெற்றுள்ளது.
அதனைத் தொடர்ந்து பிரதமர் மோடி- சீன அதிபர் ஜின்பிங் தலைமையில் உயர்மட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை கூட்டம் நடைபெற்றுவருகிறது. இந்தியா சார்பில் வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவல் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.
மோடி - ஜின்பிங் இரண்டாவது நாளாக பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர். இரு நாட்டு மக்களுக்கு இடையிலான தொடர்பை வலுப்படுத்துவது குறித்து கருத்துக்களை பரிமாறிய வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் இந்தியா மற்றும் சீன அதிகாரிகள் நிலையிலும் இருதரப்பு பேச்சுவார்த்தை தனி தனியே நடைபெறுகிறது. தலா 8 அதிகாரிகள் விதம் இருநாட்டு குழுவினரும் தனியே பேச்சுவார்த்தை நடத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளனர்.
கோவளம் தாஜ் பிஷர்மேன்ஸ் ஓட்டலில் உள்ள கண்ணாடி அறையில் பிரதமர் மோடி - சீன அதிபர் ஜின்பிங் பேச்சுவார்த்தை நடத்திவருகின்றனர்.
இன்றைய நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு, மாமல்லபுரத்தில் இருந்து கிளம்பி சென்னை ஐ.டி.சி சோழா ஹோட்டலுக்கு இரவு 9 மணிக்கு வருவதாக இருந்த சீன அதிபர் ஜி ஜின்பிங் பயணத்திட்டம் மாற்றப்பட்டுள்ளது. இரவு 9.30 மணிக்கு மேலாகத்தான் மாமல்லபுரத்தில் இருந்தே கிளம்ப உள்ளதாகத் தற்போது தகவல் வெளியாகி உள்ளது.
சீன அதிபர் ஜின்பிங்குக்கு மோடி இரவு விருந்து வழங்குகினார். அதில், தமிழகத்தின் பாரம்பரிய உணவுகளான தக்காளி ரசம், சாம்பார், குருமா, கவுனி அரிசி அல்வா ஆகியவை இடம்பெற்றன.
சீன அதிபர் ஜின்பிங்குக்கு நினைவுப்பரிசை வழங்கினார் நரேந்திர மோடி. நாச்சியார் கோயில் அன்னம் விளக்கு மற்றும் தஞ்சை நடனமாடும் சரஸ்வதி ஓவியத்தை ஜின்பிங்குக்கு நினைவுப்பரிசாக வழங்கினார் மோடி.
இந்திய பிரதமர் மோடி மற்றும் சின அதிபர் ஜின்பிங் இருவரும் பரதநாட்டியம், கதகளி கலை நிகழ்ச்சிகளை ஆர்வத்துடன் கண்டு ரசிக்கின்றனர்.
மோடியும் ஜின்பிங்கும் சிற்பங்களை பார்வையிட்டு வருகின்றனர். மாமல்லபுர சிற்பங்கள் குறித்து சீன அதிபருக்கு பிரதமர் மோடி விளக்கமளிக்கிறார்.
மாமல்லபுரம் வந்தடைந்தார் சீன அதிபர் ஜின்பிங். மாமல்லபுரம் அர்ச்சுணன் தபசு பகுதியில் சீன அதிபரை வரவேற்றார் பிரதமர் மோடி.
சீன அதிபர் ஜின்பிங்கை வரவேற்க தமிழகத்தின் பாரம்பரிய உடையான வேட்டி, சட்டையில் மாமல்லபுரம் வந்தார் பிரதமர் நரேந்திர மோடி.
கிண்டி ஐடிசி ஹோட்டலில் இருந்து மாமல்லபுரம் புறப்பட்டார் சீன அதிபர் ஜி ஜின்பிங்.
கிண்டி ஐடிசி கிராண்ட் சோழா ஹோட்டலுக்கு வந்தடைந்தார் சீன அதிபர் ஜின்பிங்!
2 நாள் பயணமாக சீன அதிபர் ஜி ஜின்பிங் சென்னைக்கு தனி விமானம் மூலம் வந்தடைந்தார்.
சீன அதிபரை வரவேற்கும் வகையில் வழிநெடுகிலும் 34 இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. சென்னை கிண்டியில் உள்ள ஐடிசி கிராண்ட் சோழா ஓட்டலில் சீன அதிபர் ஓய்வெடுக்க உள்ளார்.
சீன அதிபர் சற்று நேரத்தில் சென்னை வருவதையொட்டி மீனம்பாக்கம் ஜிஎஸ்டி சாலை, ஐடிசி ஹோட்டல் முதல் கிண்டி செல்லும் சாலையில் போக்குவரத்து நிறுத்தம்.
சின்னமலையில் இருந்து விமான நிலையம் செல்லும் சாலையிலும் போக்குவரத்து நிறுத்தம்.
சீன அதிபர் ஜி ஜின்பிங்கை அழைத்துவர ஐ.டி.சி கிராண்ட் சோழாவில் இருந்து பிரத்யேக கார், சீன பாதுகாப்பு படையுடன் விமானநிலையம் புறப்பட்டது.
சீன அதிபரை வரவேற்க துணை முதல்வர் ஓபிஎஸ் சென்னை விமான நிலையம் வருகை தந்தார்.
சீன அதிபர் வருகையைக் கண்டித்து ஐ.டி.சி சோழா ஹோட்டல் முன்பு முழக்கம் எழுப்பிய 6 திபெத்தியர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
“கலாசாரம் மற்றும் விருந்தோம்பலுக்குப் பெயர்பெற்ற மாபெரும் மாநிலமான தமிழ்நாட்டிற்கு வந்திருப்பதில் நான் மகிழ்ச்சி அடைகிறேன்” - பிரதமர் மோடி தமிழில் ட்வீட் !
காஞ்சிபுரம் மாவட்டம் திருவிடந்தையில் இருந்து காரில் கோவளம் சென்றடைந்தார் பிரதமர் மோடி.
சென்னை விமான நிலையம் வந்தடைந்த மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டர் மூலம் திருவிடந்தை சென்றார்.
சென்னை விமான நிலையம் வந்தடைந்தார் பிரதமர் நரேந்திர மோடி. ஆளுநர் பன்வாரிலால் புரோகித், முதல்வர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் வரவேற்றனர்.
சீன் அதிபர் மோடி சந்திப்பின் ஒரு அங்கமாக, சிறப்பு கலை நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக குண்டு துளைக்காத மேடை உருவாக்கப்பட்டுள்ளது.
சீன அதிபருடனான சந்திப்பிற்காக சென்னை வர இருக்கும் பிரதமர் மோடிக்கு, எதிர்ப்பு தெரிவித்து ட்விட்டரில் #GoBackModi என்ற ஹேச்டேக் டாப் ட்ரெண்டிங்கில் உள்ளது.
ஓ.எம்.ஆர் மற்றும் கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள அனைத்து சினிமா அரங்குகளிலும் இன்றைய காட்சிகள் ரத்து செய்யப்படுகின்றன.
சீன அதிபர் விமான நிலையம் முதல் கிண்டி ஐ.டி.சி ஹோட்டல் செல்லும் நேரத்தில், மெட்ரோ மற்றும் மின்சார ரயில் போக்குவரத்து நிறுத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை ஜி.எஸ்.டி சாலை (விமான நிலையம் முதல் கத்திப்பாரா வரை), அண்ணாசாலை (கத்திப்பாரா முதல் சின்னமலை வரை), சர்தார் வல்லபாய் பட்டேல் சாலை, ராஜீவ் காந்தி சாலை மற்றும் கிழக்கு கடற்கரை சாலை ஆகிய சாலைகளில் போக்குவரத்து தாமதமாக செல்ல வாய்ப்புள்ளது.
சீன் அதிபரின் மாமல்லபுரம் பயணம் ஓ.எம்.ஆர் சாலை வழியாக திட்டமிடப்பட்டுள்ளதால், சர்தார் வல்லபாய் படேல் சாலை, ஓ.எம்.ஆர் ராஜிவ் காந்தி சாலை ( சோழிங்க நல்லூர்) வரை போக்கு வரத்து நிறுத்தப்படும். பிற்பகல் 2 மணி முதல் இரவு 9 மணி வரை ஓ.எம்.ஆர் சாலையில் போக்கு வரத்து அனுமதிக்கப்படாது. நகருக்குள் வரும் வாகனங்கள் சோழிங்க நல்லூரில் இருந்து, பெரும்பாக்கம் நோக்கி திருப்பி அனுப்பப்படும்.