சீன அதிபர் ஜி ஜின்பிங் இரண்டு நாள் பயணமாக சென்னை வந்துள்ளார். பிரதமர் மோடியும் சீன அதிபரும் வரலாற்றுச் சிறப்புமிக்க புராதான நகரான மாமல்லபுரத்தில் இன்றும் நாளையும் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.
விமானம் மூலம் சென்னை வந்த சீன அதிபருக்கு விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. சீன அதிபரின் வருகையையொட்டி, சென்னை மாநகர் மற்றும் மாமல்லபுரத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
கிழக்கு கடற்கரை கடலோர பகுதி முழுமையாக போலிஸாரின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. கடற்படை மற்றும் விமானப்படையும் உஷார் படுத்தப்பட்டுள்ளது.
மோடி முன்னதாக கார் மூலம் மகாபலிபுரம் வந்தார். மகாபலிபுரத்தில் சீன அதிபரை பிரதமர் மோடி வரவேற்றார். பின்னர் இருவரும் அங்கிருக்கும் சிற்பங்களை வரிசையாக கண்டுகளித்தனர். அங்கிருக்கும் சிலைகள் குறித்து மோடி ஜின்பிங்கிடம் விவரித்தார்.
பின்னர் அர்ஜுனன் தபசு பகுதியை இருவரும் சுற்றிப்பார்த்தனர். அந்தப் பகுதியின் வரலாற்றை பிரதமர் மோடி ஜின்பிங்கிடம் விவரித்தார். இவர்கள் இருவருடன் சீன அதிகாரி ஒருவரும் இந்திய அதிகாரி ஒருவரும் உடன் இருந்தனர்.
அப்போது பலத்த பாதுகாப்பிற்கு இடையே நாய் ஒன்று அவர்கள் அருகே ஓடியது. அந்த நாயை விரட்ட முடியாமல் அதிகாரிகள் அவதியடைந்தனர். எனினும் சிறிது நேரத்திற்குப் பின் நாய் அங்கிருந்து விரட்டப்பட்டது.
இந்த சம்பவம் பாதுகாப்பு அதிகாரிகளிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும், இவ்வளவு பலத்த பாதுகாப்பிற்கு இடையே இச்சம்பவம் நடந்துள்ளது பாதுகாப்பில் குளறுபடிகள் உள்ளதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளது.