பிரதமர் மோடி - சீன அதிபர் ஜி ஜின்பிங் சந்திப்பு மாமல்லபுரத்தில் நடைபெறவிருக்கும் நிலையில், மாமல்லபுரத்தின் தேவைகள் எனப் பட்டியலிட்டு அறிக்கை வெளியிட்டுள்ளார் ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ.
வைகோ விடுத்துள்ள அறிக்கை பின்வருமாறு :
“கி.மு. 100ம் ஆண்டில், சீனாவின் கான்-டோ-ஓ- வில் இருந்து கப்பல் மூலம் இரண்டு மாதங்கள் பயணம் செய்தால், காஞ்சி நாட்டை அடையலாம்; காஞ்சி பரந்தும் மக்கள் மிகுந்தும் பலவிதமான பொருள்களோடு முத்தும் மணி வகைகளும் நிரம்பித் திகழும் நாடு; பேரரசர் வான் கி.மு. 140-86 காலம் முதல் அந்நாட்டுடன் வானிபம் செய்து வருகின்றார்கள் என்று காஞ்சியைப் பற்றி சீனப்பயணி பான்-கோ எழுதி இருக்கின்றார்.
கி.மு. 10 இல், கிரேக்க நாட்டு ஸ்டிராபோ என்ற வரலாற்று ஆசிரியர், தமிழகக் கடற்கரைப் பட்டினத்தில் இருந்து பரிசுகளோடு அனுப்பி வைத்த தூதுவர்கள் அகஸ்டஸ் சீசரிடம் வந்தார்கள் என்கிறார்.
கி.பி. 550-600 சீன வரலாற்று ஆசிரியர் மா-டவான் லி, தமிழர்கள் எழுதப்பட்ட இலக்கியங்கள் மட்டும் அல்லாமல், வானவியல் அறிவும் பெற்றுள்ளார்கள்; ஆடவர்கள் எல்லோரும் ஓலைச்சுவடிகளில் பாதுகாக்கப்பட்ட சித்தாந்தம் என்ற வழிகாட்டும் நூலைக் (திருக்குறள்) கற்கின்றார்கள் என்று குறிப்பிட்டு இருக்கின்றார்.
கி.பி. 640 இல், யுவான் சுவாங் என்ற சீனப் பயணி, காஞ்சி தலைநகரம்; இது வளமான பூமி, பூவும் கனிகளும் பெரு மதிப்புள்ள பல்வகைப் பொருள்களும் கொண்டு இருந்தது; இதன் மக்கள் தைரியம் உடையவர்களாகவும் நம்பத் தகுந்தவர்களாகவும் பொதுநலம் பேணுபவர்களாகவும் கல்வியில் நாட்டம் உடையவர்களாகவும் இருந்தார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்.
யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற மூதுரைக்கு எடுத்துக்காட்டாக, பல்லவர்களின் கடல் வாணிபம், சீனர்களின் கடல்வழி, பட்டு வழித்தட வாணிபம், நீண்ட நெடிய தொடர்புகள் மூலம், காஞ்சியில் பட்டுத் தொழில்நுட்பம் கிடைத்தது.
பல்லவர்கள் சீனா, எகிப்து, ரோம் போன்ற பேரரசுகளுடன் வாணிபம் செய்ததற்கான சான்றுகளுக்கு, மாமல்லபுரம் கிருஷ்ணர் மண்டபத்தில் செதுக்கப்பட்டுள்ளன சிற்பம் சாட்சியாக விளங்குகின்றது. பல்லவர்களின் சிங்கம், எகிப்தியர்களின் மனித முகம் சிங்க உடல் அமைப்பு கொண்ட ஸ்பிங்ஸ், சீனர்களின் டிராகன், ரோமர் சிங்கம் போன்ற பேரரசுகளின் வீரத்தின் அடையாளங்களாகச் செதுக்கி வைத்துள்ளனர்.
கி.பி. 6ம் நூற்றாண்டு துவங்கி, 13ம் நூற்றாண்டு வரை காஞ்சியைத் தலைநகராகக் கொண்டு, தட்சணப் பிரதேசத்தில் முதல் பேரரசை உருவாக்கி, வடபுலத்தில் அரசியற் பாரம் பரியத்தில் தென்னாட்டின் ஆளுமையைத் தொடங்கியது பல்லவர்கள் என்றால், அது மிகை அன்று. வாதாபி வெற்றியின் மூலம் வீரத்தை நிருபித்துக் காட்டினர்.
இலங்கையின் ஆட்சி உரிமையை இழந்து தஞ்சம் வந்த நண்பன் மானவர்மனுக்காக, இலங்கை மீது படை நடத்தி வெற்றி வாகை சூடி, ஆட்சிப் பொறுப்பை அவனிடம் ஒப்படைத்தனர். இந்தோனேசியாவின் ஜாவா, சுமத்ரா தீவுகளைக் கடந்து, கம்போடியாவின் ஆங்கோர்வார்ட் வரை சென்று, கலை நகரங்களை உருவாக்கினர்.
இவர்களின் கட்டுப்பாட்டில் இருந்த சிங்கபுரம்தான், இன்றைய சிங்கப்பூர். அலைகடலின் மீது ஆதிக்கம் செலுத்தி, மகோன்னதமாக இருந்த பல்லவர்களின் ஆட்சியில், கல்வியில் சிறந்த பேராசிரியர் தர்ம பாலனை, நாளந்தா பல்கலைக் கழகத்திற்கு அனுப்பி வைத்தது.
புத்தனுக்கு அடுத்த இடத்தில் வைத்து, சீனர்கள் கோயில் கட்டி ஆராதிக்கும் போதி தர்மன், பல்லவ மன்னர்களுள் ஒருவரான புத்தவர்மப் பல்லவன், இவர் மருத்துவம் மற்றும் ஜென் புத்த மதத்தை போதித்தவர். காஞ்சியில் இருந்து வந்த த கிரேட் வாரியர் மாஸ்டர் ஆப் குங்~பூ என்று, சீனத் தற்காப்புக் கலைக்கோயில் ஷாவ்லின் டெம்பிளில் கல்வெட்டு பதித்து வைத்து இருக்கின்றார்கள்.
ஆக, நீண்ட நெடிய பாரம்பரிய கலாச்சாரத் தொடர்புகளை மீள் உருவாக்கம் செய்கின்ற வகையில், கல்லில் கலை வண்ணம் கண்ட பல்லவர்களின் துறைமுகப்பட்டினமான திருக்கடல் மல்லை என்னும் மாமல்லபுரத்தில், மாண்புமிகு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும், மாண்புமிகு சீன அதிபர் ஜி ஜின்பிங்கும் சந்தித்துப் பேசுவது வரலாற்றுச் சிறப்பு ஆகும். இதன் மூலம் இரு நாட்டிற்குள்ளும் சகோதரத்துவம் மலர்ந்து, ஆசியக் கண்டத்தின் அமைதிக்கு வித்திடுவார்கள் என நம்புகிறேன்.
இந்த நிலையில், மாமல்லபுரத்தின் தேவைகள் சிலவற்றைச் சுட்டிக்காட்ட விழைகின்றேன்.
பல்லவர்களின் மூன்று விதமான கட்டிட சிற்பக் கலைக்குச் சான்றாக உள்ள, வெட்டுதளி அர்ச்சுனன் தவக்கோலம், கட்டுதளி கடற்கரை அலை வாயில் கோயில், குடைதளி குடைவரைக் கோயில்கள், ஐந்து வகை நிலத்தின் சான்றாக கட்டிடக் கலையின் வளர்ச்சிக்கு எடுத்துக்காட்டாக விளங்கும் ஐந்துரதம் மற்றும் பல்லவர்கள், எகிப்து, சீனம், ரோம் நாட்டு தொடர்புகளைக் காட்டும் சிற்பங்களை, புதிய ரூபாய் நோட்டுகளில் அச்சிடுவது, புதிய தபால் தலைகள் வெளியிடுவது, இந்திய அரசுக்குச் சொந்தமான வானூர்திகளில் விளம்பரப்படுத்துவது, இந்திய அரசின் சார்பில் வீரத்திற்கு சான்றாக வழங்கப்படும் விருதுகளில் மாமல்லன் விருதுகளை அறிமுகப்படுத்துவது, உலக அளவில் மாமல்லபுரத்தை விளம்பரப்படுத்த உதவும்.
தஞ்சை மற்றும் மதுரையில் சோழன், பாண்டிய மன்னர்களின் நினைவாக அமைக்கப்பட்டுள்ள அலங்கார நுழைவு தோரண வாயில்கள் போன்று, மகேந்திரவர்ம பல்லவன், நரசிம்மவர்ம பல்லவன், இராஜசிம்மவர்ம பல்லவன், தளபதி பரஞ்ஜோதி பெயர்களில் காஞ்சியிலும், மாமல்லபுரத்திலும் நுழைவு வாயில்கள் அமைக்க வேண்டும்.
விடுமுறை பண்டிகைக் காலங்களில் சுற்றுலாப் பயணிகள் எளிதாக வந்து செல்லும் வகையில் சாலை விரிவாக்கம் செய்ய வேண்டும்; தேவைப்படும் இடங்களில் இருவழிச் சாலைகள் அமைக்கப்பட வேண்டும். சுற்றுலா படகுப் பயணங்கள் ஏற்பாடு செய்ய வேண்டும்.
108 வைணவத் திருத்தலங்களுள் 63வது திருத்தலமான ஸ்தலசயனப் பெருமாள் கோவில் முகப்பில், பாதியில் நிறுத்தப்பட்ட ராஜா கோபுரம் பழமை மாறாமல் புதுப்பிக்கப்பட வேண்டும்.
சுற்றுலாப் பயணிகளைப் பெரிதும் பாதிக்கின்ற பல்வேறு வாகன சுங்கவரி, பார்வையாளர் கட்டணம் இவற்றால் விழிபிதுங்கும் நிலையை மாற்றிட வேண்டும்.
திருக்கழுக்குன்றம், திருப்போரூர் வழித்தடங்களிலும், கிழக்குக் கடற்கரைச் சாலையிலும் வாகன நுழைவுக் கட்டணம், அடுத்த அரை கிலோ மீட்டரில் மாமல்லபுரம் பேரூராட்சியின் சார்பில் வாகன நுழைவுக் கட்டணம், மீண்டும் அரை கிலோ மீட்டர் தூரத்தில் வாகன நிறுத்தக் கட்டணம், அடுத்து மத்தியத் தொல்லியல் துறையின் சார்பில் பல்லவர் காலச் சிற்பங்களைப் பார்வையிட பார்வையாளர் கட்டணம் என்று மாமல்லபுரத்தைச் சுற்றிலும் பல இடங்களில் பகல் கொள்ளை அடிக்கப்படுகின்றது. மத்திய மாநில அரசுகள், இதை மாற்றி அமைக்க வேண்டும்.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளுக்கு உயர்த்தப்பட்டுள்ள பார்வையாளர் கட்டணத்தை வெகுவாகக் குறைக்க வேண்டும்.
மாமல்லபுரத்தில் பாதுகாக்கப்பட வேண்டிய அனைத்து இடங்களுக்கும், மத்திய தொல்பொருள் ஆய்வுத்துறையினர் மதில் சுவர் எழுப்பி வேலி அமைத்துக்கொண்டு விட்டனர்.
எனவே, மாமல்லபுரம் 13 ஆவது வார்டு அண்ணாநகர் 160/2 கிராம நத்தம் பகுதியில், அனைத்து சாதிப் பிரிவு மக்களும் ஒற்றுமையாக வாழ்ந்து வருகின்ற சுமார் 400 குடும்பங்களுக்கு, பட்டா வழங்குவதில் உள்ள தடைகளை விலக்கி, மத்திய மாநில அரசுகள் உடனடியாக பட்டா வழங்கிட வேண்டும்.
புகழ் வாய்ந்த மாமல்லப்புரம் சர்வதேச சுற்றுலா நகரமாகத் திகழ, சுற்றுலாப் பயணிகளின் தேவைகளை அறிந்து, உள்ளூர் மக்களின் கருத்துக் கேட்டு, அயல்நாட்டுப் பயணிகளை மென்மேலும் ஈர்க்கின்ற வகையில், சுற்றுலா வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என, ம.தி.மு.க சார்பில் மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்துகின்றேன்.” எனத் தெரிவித்துள்ளார் வைகோ.