கடந்த சில மாதங்களுக்கு முன்பு தமிழகத்தில் கடும் தண்ணீர் பஞ்சம் நிலவியது. சென்னையில் பத்து, இருபது நாட்களுக்கு ஒருமுறை என மிகக்குறைந்த அளவு குடிநீர் விநியோகம் செய்யப்படும் அவலநிலை உருவாகியது. இதையடுத்து, சென்னையின் தண்ணீர் தேவையைப் பூர்த்தி செய்ய, ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் சென்னைக்கு தண்ணீர் கொண்டு வரப்பட்டது.
ஜோலார்பேட்டையில் இருந்து ரயில் மூலம் கொண்டுவரப்பட்ட தண்ணீர் வில்லிவாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து குழாய் மூலம் கீழ்ப்பாக்கம் சுத்திகரிப்பு நிலையம் கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து தண்ணீர் லாரி மூலம் மக்களுக்கு விநியோகிக்கப்பட்டு வந்தது.
இந்நிலையில், ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டு செல்வது இன்று முதல் நிறுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த ஜூலை 12ம் தேதி முதல் இன்று வரை சென்னைக்கு 159 ரயில்களில் 39 கோடியே 25 லட்சம் லிட்டர் தண்ணீர் விநியோகம் செய்யப்பட்டுள்ளது.
வடகிழக்குப் பருவமழை தொடங்க உள்ளதாலும், சென்னை மக்களின் நீர் ஆதாரமாக விளங்கும் ஏரிகளில் நீர் இருப்பு உள்ளதாலும் தண்ணீர் தேவை போதும் என்ற நிலையில் சென்னை உள்ளதால் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு ரயில் மூலம் தண்ணீர் கொண்டு வரும் திட்டத்தை நிறுத்தப்படுவதாகக் கூறப்படுகிறது.