கிருஷ்ணகிரி மாவட்டம் பாம்பாறு அணையில் செல்ஃபி எடுக்கும்போது, புதுமணப்பெண் உட்பட 4 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே ஒட்டப்பட்டியைச் சேர்ந்த இளங்கோ என்பவரின் மகள்கள் கனிஷ்கா (19), சினேகா (18) ஆகியோர் திருச்செங்கோட்டில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்தனர். இளங்கோவின் மகன் சந்தோஷ் ஊத்தங்கரையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.
இளங்கோவின் அக்கா மகள் நிவேதாவுக்கும் (20), பர்கூரைச் சேர்ந்த பிரபு என்பவருக்கும் கடந்த 15 நாட்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இந்நிலையில் பிரபு, நிவேதா, கனிஷ்கா, சினேகா, சந்தோஷ், உறவினர் யுவராணி (16) ஆகியோர் நேற்று ஊத்தங்கரையில் சினிமா பார்த்துவிட்டு மாலை பாம்பாறு அணைக்கு வந்தனர்.
தண்ணீர் அதிகமாகச் சென்றுகொண்டிருந்த பாம்பாறு அணையில் நீருக்குள் நின்றவாறு 6 பேரும் செல்போனில் செல்ஃபி எடுத்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக நிவேதா, கனிஷ்கா, சினேகா, சந்தோஷ், யுவராணி ஆகியோர் வேகமாக ஓடிய தண்ணீரில் சிக்கி தத்தளித்தனர்.
செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்த பிரபு இதைக் கண்டு அதிர்ச்சியடைந்து அவர்களைக் காப்பாற்ற முயன்றார். யுவராணியை மட்டும் மீட்டு கரைக்கு கொண்டுவந்த நிலையில், மற்ற 4 பேரும் தண்ணீரில் மூழ்கினர்.
தகவலறிந்து வந்த ஊத்தங்கரை தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்த 4 பேரின் உடல்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இந்த விபத்து தொடர்பாக ஊத்தங்கரை போலிஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். செல்ஃபீ எடுக்கச் சென்று 4 பேர் பலியான நிகழ்வு அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.