பெட்ரோல், டீசல், பால், காய்கறிகள் என அன்றாடம் பயன்படுத்தும் ஒவ்வொரு பொருட்களுக்கான விலைவாசியும் அதிகரித்துக் கொண்டே வருவதால் சாமானிய மக்கள் என்ன செய்வதென்றே தெரியாமல் திக்குமுக்காடி வருகின்றனர்.
இந்த வரிசையில் தற்போது , மின் கட்டண உயர்வும் இணைந்துள்ளது. கடுமையான நிதி நெருக்கடியில் சிக்கியுள்ள தமிழக மின் வாரியம், மின்கட்டணத்தை உயர்த்த முடிவு செய்திருந்தது. இந்நிலையில் புதிய மின் இணைப்புகளுக்கான கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
அதன் படி, சிங்கிள் ஃபேஸ் மின் இணைப்பு பெற ரூ.250 ல் இருந்து 500 ஆகவும், 3 ஃபேஸ் மின் இணைப்புக்கு ரூ.500 ல் இருந்து 750 முதல் 1000 வரையிலும் உயர்த்தப்பட்டுள்ளது.
அதேபோல், பொதுக் குடிநீர் இணைப்பு மற்றும் பொது பயன்பாட்டுக்கான விளக்குகளுக்கு ரூ.500 கட்டணம் விதிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறு குறு கடைகள், நிறுவனங்கள் போன்ற பல வணிக நோக்கத்திற்கான மின் கட்டணமும் உயர்த்தப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
முன்னறிவிப்பின்றி மின் கட்டணங்களை உயர்த்தும் அரசின் இந்த நடவடிக்கையால் வணிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் கடுமையான சிரமம் ஏற்பட்டுள்ளது.
நிதி நெருக்கடியை உரிய வகையில் சமாளிக்காமல் வாக்களித்த மக்கள் மீதே நித்தமும் நிதிச் சுமையை மத்திய மாநில அரசுகள் சுமத்தி வருகின்றன. இது மக்களுக்கு அதிருப்தியையே ஏற்படுத்தியுள்ளது என அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்துள்ளன.