திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகே உள்ள லலிதா ஜுவல்லரி கடையில் நேற்று அதிகாலை 2 மணியளவில் பல கோடி மதிப்பில் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த செவ்வாய்க் கிழமை இரவு ஊழியர்கள் பணியை முடித்து கிளம்பியதும், இரவு காவலாளிகள் மட்டும் 4 பேர் கடைக்கு வெளியே இருந்திருக்கிறார்கள். நேற்று காலை பணி நேரத்தில் கடை திறக்கப்பட்ட போது, தரைத் தளத்தில் இருந்த நகைகள் அனைத்தும் காணாமல் போனதைக் கண்டு ஊழியர்கள் அதிர்ச்சியுற்றனர்.
இதனை அடுத்து திருச்சி மாநகர காவல் ஆணையர், உதவி துணை ஆணையர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து விசாரணை நடத்தினர்.
லலிதா ஜுவல்லரி அமைந்துள்ள பகுதி எந்த நேரமும் ஆள் நடமாட்டம் உள்ள பகுதியாகும். இங்கு, நகைக்கடைக்கும், அருகே இருந்த ஜோசப் கல்லூரிக்கும் இடையே பல காலங்களாக காலியிடம் ஒன்று உள்ளது.
அந்த இடத்தை அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் கார் நிறுத்தமாக பயன்படுத்தி வருகின்றனர். இதனை நோட்டமிட்ட கொள்ளையர்கள், லலிதா ஜுவல்லர்ஸ் கடையின் சுவரில் ஒரு ஆள் செல்லும் வகையில் ட்ரில்லிங் மிஷினால் துளையிட்டு உள்ளேச் சென்று தரை தளத்தில் உள்ள உயர் ரக தங்கம் மற்றும் வைர நகைகளை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
இதனை கடையில் பொறுத்தியிருந்த சிசிடிவியில் பதிவாகியிருந்த காட்சிகள் மூலம் கண்டறிந்த போலிஸார், கொள்ளை சம்பவத்தில் இரண்டு பேர் ஈடுபட்டுள்ளதும், இருவரும் க்ளவுஸ் மற்றும் கோமாளி போன்ற ஒரு மாஸ்க்கும் அணிந்து நகைகளை கொள்ளையடித்ததும் தெரியவந்தது. மேலும், நாயை வைத்து மோப்பம் பிடித்து விடக் கூடாது என்பதற்காக மிளகாய் பொடியையும் தூவி கொள்ளையர்கள் தப்பித்துள்ளது தடயவியல் சோதனையில் தெரிய வந்துள்ளது.
பின்னர் விசாரணையை முடுக்கிவிட்ட போலிஸார், கொள்ளையர்களை பிடிக்க 7 பேர் கொண்ட தனிப்படையை அமைத்து தீவிரமாக தேடி வருகின்றனர். மேலும், நகைக்கடையில் இரவு பணியில் ஈடுபட்ட வாட்ச்மேன்கள் நால்வர், கடையில் பணிபுரியும் 160 ஊழியர்கள் என அனைவரையும் போலிஸார் விசாரித்து வருகின்றனர்.
இதற்கிடையில், காவல்துறையில் அர்ஜூன் என்ற மோப்ப நாயை வரவழைத்து சோதித்ததில் அது, கரூர் சாலை வரை ஓடி நின்றதால் அதுவரையில் உள்ள சிசிடிவி காமிராக்களையும் போலிஸார் ஆராய்ந்து வருகின்றனர்.
லலிதா ஜுவல்லரியில் கொள்ளயடிக்கப்பட்ட சம்பவம் திருச்சி மாநகரம் மட்டுமல்லாது தமிழ்நாடு முழுவதிலும் பெரும் பேசுபொருளாக அமைந்துள்ளது.
இந்த நிலையில், லலிதா நகைக்கடையில் இருந்து நகைகளை கொள்ளையடிக்க திட்டம் போட்டு கைவரிசையில் ஈடுபட்டது வடமாநிலத்தைச் சேர்ந்த மர்ம நபர்கள் என திருச்சி மாநகர காவல் ஆணையர் அமல்ராஜ் உறுதிபட கூறியுள்ளார்.
இது தொடர்பாக புதுக்கோட்டையில் உள்ள டைமண்ட் லாட்ஜில் சந்தேகத்திற்கு இடமாக தங்கியிருந்த ஜார்கண்டைச் சேர்ந்த வட மாநிலத்தைச் சேர்ந்த நால்வரை பிடிக்க போலிஸார் விரைந்த போது அதில் அப்துல்லா என்ற நபர் மட்டும் சிக்கியுள்ளான் எனவும் காவல்துறை தெரிவித்துள்ளது.