இந்தியா - சீனா இடையிலான உறவு, வர்த்தக உறவு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் குறித்து விவாதிக்க பிரதமர் நரேந்திர மோடியும், சீன அதிபத் ஜீ ஜின்பிங்கும், தமிழகத்தின் மாமல்லபுதத்தில் சந்தித்து பேசுகின்றனர். இந்த சந்திப்பு வரும் 11ம் தேதி முதல் 13ம் தேதி வரை நடக்கிறது.
இந்தச் சூழ்நிலையில், தமிழகத்துக்கு வருகை தரும் பிரதமர் மோடி, சீன அதிபர் ஜீ ஜின்பிங் உள்ளிட்டோரை வரவேற்று பேனர் வைக்க அனுமதி கோரி மத்திய வெளியுறவுத்துறை மற்றும் தமிழக அரசின் செய்தி மற்றும் தகவல் தொடர்புத்துறை இயக்குனர் சார்பில் தமிழக நகராட்சி நிர்வாகத்துறை ஆணையர் பாஸ்கரன் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
தமிழகம் வரவுள்ள பிரதமர் மோடி மற்றும் சீன அதிபரை வரவேற்கும் வகையில் சென்னை விமான நிலையம் முதல் மாமல்லபுரம் வரை 14 இடங்களில் அக்டோபர் 9ம் தேதி முதல் அக்டோபர் 13-ம் தேதி வரையிலான ஐந்து நாட்களுக்கு அரசின் சார்பில் பேனர்கள் வைக்க அனுமதிக்க வேண்டுமென அந்த மனுவில் கோரப்பட்டது.
இந்த மனு நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் சேஷசாயி அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி தாங்கள் வைக்கப்போகும் பேனர் மாதிரிகளை நீதிமன்றத்தில் காண்பித்தார்.
அப்போது தி.மு.க சார்பாக மூத்த வழக்கறிஞர் வி்ல்சன் ஆஜராகி, ”அரசு பேனர் வைக்க எப்படி நேரடியாக நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும்? இதில் அரசின் மறைமுக திட்டம் உள்ளது. சட்டத்துக்கு உட்பட்டு துறை ரீதியாக மட்டுமே அனுமதி பெற வேண்டும்” என்று வாதிட்டார்.
இதனைக் கேட்ட நீதிபதிகள், அரசு பேனர் வைக்க அனுமதி கேட்டு நீதிமன்றத்தை நாடுவது ஏன் என கேள்வி எழுப்பினர். ஆளுங்கட்சியினர் சார்பாக எந்தவித பேனர்கள் வைக்க மாட்டோம் என நீதிமன்றத்தில் அரசு தலைமை வழக்கறிஞர் உத்தரவாதம் அளித்தார்.
இந்த உத்தரவாதம் தங்களுக்குத் தேவையில்லை எனவும் விதிகளை பின்பற்றி பேனர் வைக்க வேண்டும் என்பது அரசின் கடமை. சட்டத்துக்கு உட்பட்டு அரசு சார்பாக மட்டுமே பேனர் வைக்க அனுமதிக்க முடியும். ஆளுங்கட்சியினர் பேனர் வைக்க அனுமதிக்க இயலாது எனும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.