தமிழ்நாடு

ஒரு பிணந்தின்னிக் கழுகால் சமூகத்திற்கு எவ்வளவு லாபம்? - காந்தியின் பெயரால் கழுகுகளைக் காக்க புதிய யுக்தி!

மகாத்மா காந்தி பெயரில் பாறு கழுகுகளை காப்பாற்றுவதற்காக மரங்கள் நடும் பணியை அருளகம் எனும் சூழலியல் அமைப்பு தொடங்கியுள்ளது.  

ஒரு பிணந்தின்னிக் கழுகால் சமூகத்திற்கு எவ்வளவு லாபம்? - காந்தியின் பெயரால் கழுகுகளைக் காக்க புதிய யுக்தி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
பி.என்.எஸ்.பாண்டியன்
Updated on

சுதந்திரத்தை விட தூய்மையே முக்கியமானது என்று எடுத்துரைத்தவர் காந்தி. ஒரு சமயம் கல்கத்தாவில் காங்கிரஸ் மகாசபை கூடியது. சபைக்கு வந்த உறுப்பினர்கள் தங்குவதற்காக தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டன. அந்த முகாம்கள் ஒரே குப்பைக் கூளமாக இருப்பதைக் கண்ட காந்தியடிகள், தொண்டர்களிடம் இவற்றை சுத்தப்படுத்துங்கள் என்றார்.

தொண்டர்களோ, ‘இது துப்புரவு பணியாளர்களின் வேலை. நாங்கள் எப்படி சுத்தப்படுத்துவது?’ என்று கேட்டனர். உடனே, காந்தி அருகில் இருந்த துடைப்பத்தை எடுத்து தானே துப்புரவு செய்யத் தொடங்கிவிட்டார். சுத்தத்தையும், சுகாதாரத்தையும் வலியுறுத்தியவர் அவர்.

இதே தூய்மைப் பணியினை காட்டில் சத்தமில்லாமல் செலவில்லாமல் பாறு பெருங்கழுகுகள் ஆற்றி வருகின்றன. பாறுகழுகுகள் எனப்படும் பிணந்திண்ணிக் கழுகுகள் காட்டின் கழிவுகளை தின்று சூழலியலுக்கு பெரும் சேவையாற்றுகின்றன.

ஒரு பிணந்தின்னிக் கழுகால் சமூகத்திற்கு எவ்வளவு லாபம்? - காந்தியின் பெயரால் கழுகுகளைக் காக்க புதிய யுக்தி!

இவைகள் ஆற்றும் சேவையைப் பட்டியலிட்டு அதற்கெல்லாம் நாம் செயற்கையாக இயந்திரத்தைக் கொண்டோ மனித ஆற்றலைக் கொண்டோ செய்தால் எவ்வளவு செலவு ஆகும் என்று ஆராய்ச்சியாளர் ஒருவர் கணக்குப் போட்டார். அப்படிப் பார்த்ததில் ஒரு பாறு கழுகு ஆண்டொன்றுக்கு சுமார் 7 இலட்சம் ரூபாய் பெறுமானமுள்ள சூழல் வெகுமதியை (Ecosystem Values) அளிக்கிறது என்று தெரியவந்தது. (இது 2014ம் ஆண்டு போடப்பட்ட கணக்கு).

இப்படித் தூய்மைக் காவலனாய் விளங்கும் பாறு பெருங்கழுகுகளைப் போற்றும் விதமாகவும் அண்ணல் காந்தியடிகளின் 150 ஆம் ஆண்டு பிறந்தநாளைக் கொண்டாடும் விதமாகவும் அக்டோபர் 2ம் தேதியான இன்று பாறுகள் கூடமைக்கவும் தங்குவதற்கும் ஏற்ற 150 மரங்கள் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்திற்குட்பட்ட மாயாறு கரையில் நடப்பட உள்ளன.

ஒரு பிணந்தின்னிக் கழுகால் சமூகத்திற்கு எவ்வளவு லாபம்? - காந்தியின் பெயரால் கழுகுகளைக் காக்க புதிய யுக்தி!

இதுகுறித்து அருளகம் பாரதிதாசன் கூறுகையில், “அண்மையில் ஈரோட்டில் நடைபெற்ற பாறு பெருங்கழுகுகள் குறித்த விழிப்புணர்வுக் கருத்தரங்கில், தோப்புபள்ளம் பகுதியில் முன்பு அவை கூடமைத்திருந்ததாகவும் தற்போது அவ்விடத்தைத் தவிர்த்து விட்டதாகவும் தெரிவிக்கப்பட்டது.

மேலும் அவை கூடமைக்கத் தோதான மருத மரங்களும், தாண்றி மரங்களும், காட்டு மாவும் அப்பகுதியில் அருகி வருவதாகவும் கவலை தெரிவிக்கப்பட்டது. இதைக் கருத்தில் கொண்டும் வனத்துறையுடன் இணைந்து இப்பகுதியில் மேற்கண்ட மரவகைகள் நட அருளகம் அமைப்பு முன்வந்துள்ளது.

வருங்காலங்களில் பாறு பெருங்கழுகுகள் எண்ணிக்கை பெருகும் போதும் புதிய இடங்களை வாழிடமாகத் தேர்ந்தெடுக்கும்போதும் காந்தியின் பெயரைத் தாங்கி இப்போது நடப்படும் மரங்கள் அவற்றுக்குக் கைகொடுக்கும் என்றும் புகலிடமாக விளங்கும் என்றும் நம்பலாம்”என்றார்.

மகாத்மாவின் பெயரில் நடக்கும் இந்த மரம்நடும் செயல்பாடுகளில் கலந்து கொள்ளவும், உதவி செய்வதற்கும் அருளகம் அமைப்பின் செயலர் பாரதிதாசனை அணுகலாம்.

banner

Related Stories

Related Stories