தமிழ்நாடு

“தமிழகத்தில் பிறந்தது தான் இவர்கள் செய்த தவறா?” - எழுவர் விடுதலைக்காக உண்ணாவிரதம் என முகிலன் அறிவிப்பு!

10-ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் ஆயுள் கைதிகளை விடுவிக்காததைக் கண்டித்து நாளை முதல் சிறையில் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக சமூக ஆர்வலர் முகிலன் தெரிவித்துள்ளார்.

“தமிழகத்தில் பிறந்தது தான் இவர்கள் செய்த தவறா?” - எழுவர் விடுதலைக்காக  உண்ணாவிரதம் என முகிலன் அறிவிப்பு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

கரூர் மாவட்டத்தில் உள்ள காவிரி ஆற்றில் மணல் கொள்ளை நடைபெற்றதை எதிர்த்து சுற்றுச்சூழல் ஆர்வலர்களை ஒருங்கிணைத்து காவிரி ஆறு பாதுகாப்பு இயக்கத்தை நடத்தி வந்தவர் முகிலன். இதனைத் தொடர்ந்து தமிழகத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு போராட்டம், மீத்தேன், கெயில், ஸ்டெர்லைட் என பல போராட்டங்களில் பங்கேற்றவர்.

கடந்த 2017ம் ஆண்டு கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி காவல் எல்லைக்குட்பட்ட சீத்தப்பட்டி பகுதியில் நடைபெற்ற தெருமுனை பிரச்சார கூட்டத்தில் இந்திய இறையாண்மைக்கு எதிராகப் பேசியதாக முகிலன் மீது வழக்கு தொடுக்கப்பட்டு கரூர் நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.

இவ்வழக்கில் இன்று மீண்டும் விசாரணைக்காக முகிலனை திருச்சி மத்திய சிறையில் இருந்து காவல்துறையினர் அழைத்து வந்தனர். நீதிமன்ற வளாகத்தில் நுழைந்த காவல் வாகனத்தில் இருந்து இறங்கும் முன்பாக முகிலன் கோஷமிட்டார்.

அப்போது, 10 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் இருக்கும் ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுவிக்க உத்தரவிட்டு இரண்டு ஆண்டுகளாகியும் விடுவிக்கவில்லை. 300-க்குக் மேற்பட்ட கைதிகள் விடுவிக்கப்படாமல் உள்ளனர். இதனைக் கண்டித்து நாளை முதல் சிறையில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடபோகிறேன் எனத் தெரிவித்தார்.

மேலும், அஸ்ஸாம் மாநிலத்தில் உல்பா தீவிரவாதிகளை பா.ஜ.க அரசு விடுவித்து இருக்கிறது. தமிழகத்தில் பிறந்ததற்காக பேரறிவாளன், நளினி, சாந்தன் உள்பட 10 பேரை விடுவிக்க மறுப்பது ஏன் எனக் கேள்வி எழுப்பிய முகிலன், நேற்று பிரதமர் மோடியிடம் கோதாவரி-காவிரி ஆறு இணைப்பின் மூலம் 200 டி.எம்.சி. நீரை பெறுவதற்கு 9,976 கோடி ரூபாய் கேட்டு தமிழக முதலமைச்சர் முறையிட்டுள்ளார். காவிரியில் மணல் அள்ளாமல் இருந்தாலே 200 டி.எம்.சி நீரை தேக்கி வைக்க முடியும். ஆனால் மக்களை ஏமாற்றுவதற்காக திசை திருப்புகிறார்கள் என்றார்.

வாகனத்தை விட்டு கீழே இறங்க மறுத்த முகிலனை காவல் துறையினர் வாகனத்தில் இருந்து வெளியே இழுத்து வந்தனர். அப்போது காவலர்களின் கையில் இருந்து விடுபட்டு மண் தரையில் விழுந்து மீண்டும் தனது கோஷங்களை எழுப்பினார்.

மேலும், நீதிமன்றத்திற்குள் வர மறுத்த முகிலனை காவல்துறையினர் குண்டுக்கட்டாக தூக்கிச் சென்று நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். இதனால் நீதிமன்ற வளாகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

பின்னர் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நீதிமன்ற நடுவர் கோபிநாத் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இவ்வழக்கை விசாரித்த நீதிபதி கோபிநாத் வழக்கை வரும் 17ம் தேதிக்கு ஒத்திவைத்து அதுவரை முகிலனை நீதிமன்றக் காவலில் வைக்க உத்திரவிட்டார்.

banner

Related Stories

Related Stories