தமிழ்நாடு

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த தருமபுரி மாணவன் நீதிமன்றத்தில் சரண் : தொடர்ந்து அதிர்ச்சி தகவல்கள்!

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த தருமபுரி மருத்துவ கல்லூரி மாணவன் முகமது இர்பான் சேலம் நீதிமன்றத்தில் சரண் அடைந்தார்.

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த தருமபுரி மாணவன் நீதிமன்றத்தில் சரண் : தொடர்ந்து அதிர்ச்சி தகவல்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
kalaignar seithigal
Updated on

தேனி மருத்துவக் கல்லூரியில் இந்த ஆண்டு மருத்துவப் படிப்பில் சேர்ந்த உதித் சூர்யா என்ற மாணவர், நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து மோசடியில் ஈடுபட்டது தெரியவந்ததை அடுத்து, அந்த மாணவரும் அவரது பெற்றோரும் கைது செய்யப்பட்டனர்.

இவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் திருவனந்தபுரத்தில் நீட் பயிற்சி மையத்தின் புரோக்கர் ஜார்ஜ் கைது செய்யப்பட்டார். அவரிடம் விசாரணை நடத்தப்பட்டதில் பல்வேறு தகவல்கள் கிடைத்தன.

அந்த தகவல்களின் அடிப்படையில் சென்னையை சேர்ந்த பிரவீன், அவரது தந்தை சரவணன், ராகுல் அவரது தந்தை டேவிட், அபிராமி ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது.

உதித் சூர்யா
உதித் சூர்யா

இதனையடுத்து தேனி சி.பி.சி.ஐ.டி போலிஸார் முகமது இர்பான் அவரது தந்தையையும் தேடிவந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் வாணியம்பாடியில் முகமது இர்பான் இன் தந்தை முகமது சபி கைது செய்யப்பட்டார்.

முகமது இர்பான் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார். இவர் மொரிஷியஸ் நாட்டிற்கு தப்பி சென்றுவிட்டதாக பரபரப்பாக பேசப்பட்டது. நேற்று சேலத்தில் சி.பி.சி.ஐ.டி போலிஸாரால் கைது செய்யப்பட்டதாகவும் தகவல் வெளியானது. ஆனால் சி.பி.சி.ஐ.டி போலிஸார் இர்பானை தேடி வருவதாகத் தெரிவித்திருந்தனர்.

முகமது இர்பான்
முகமது இர்பான்

இந்நிலையில் முகமது இர்பான் இன்று காலை 10.30 மணி அளவில் சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்திற்கு வந்து சரணடைந்தார். வழக்கை விசாரித்த மாஜிஸ்திரேட் சிவா எதிர்வரும் அக்டோபர் 9ம் தேதி வரை மாணவர் இர்பானை சேலம் மத்திய சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.

இர்பான் சரணடைந்த தகவல் அறிந்த தேனி சி.பி.சி.ஐ.டி போலீசார் சேலம் நீதிமன்றத்துக்கு வந்து முகமது இர்பானிடம் விசாரிக்க முயன்றனர். ஆனால் இதற்கு வழக்கறிஞர் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர் இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து மாணவர் முகமது இர்பான் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட உள்ளார்.

இதனிடையே மாணவரின் வழக்கறிஞர்கள் செய்தியாளர்களிடம் கூறும்போது, மாணவர் இர்பான் மொரிஷியஸில் மருத்துவ படிப்பு படித்து வருவதாகவும் இவர் ஆள்மாறாட்ட வழக்கில் தேடப்பட்டு வந்ததாக வெளியான தகவலையடுத்து இன்று அதிகாலை மொரிஷியஸில் இருந்து விமானம் மூலம் பெங்களூர் வந்து பின்பு சேலம் நீதிமன்றத்தில் சரண் அடைந்துள்ளதாகவும், இவர் தருமபுரி அரசு மருத்துவமனையில் பயிலவில்லை என்றும் விளக்கம் அளித்துள்ளனர். இந்த வழக்கை சட்டரீதியாக எதிர்கொள்ள உள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

banner

Related Stories

Related Stories