கவிப்பேரரசு வைரமுத்து அவர்களின் தமிழாற்றுப்படை ஒன்பதாம் பதிப்பு அறிமுக விழா சென்னை திருவொற்றியூர் நெடுஞ்சாலை அருகே உள்ள தங்கம் மாளிகையில் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் கவிஞர் வைரமுத்து, தி.மு.க பொருளாளரும், முன்னாள் அமைச்சருமான துரைமுருகன், வடசென்னை நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி ஆகியோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் வைரமுத்துவின் தமிழாற்றுப்படையின் ஒன்பதாம் பதிப்பு வெளியிடப்பட்டது.
நிகழ்ச்சியில் பேசிய தி.மு.க பொருளாளர் துரைமுருகன், வடசென்னை மக்கள் தமிழ் மீது அதிக பற்று கொண்டுள்ளனர். அண்ணா அவர்கள் எங்கு தி.மு.க.வை ஆரம்பிக்க வேண்டும் என நினைத்து வடசென்னையிலே, இதே சாலையிலேயே ஆரம்பித்தார்.
தமிழை மிகவும் அழகாக பல்வேறு கோணங்களில் தத்ரூபமாக விளக்கும் திறன் எங்கிருந்து வைரமுத்துவிற்கு வருகிறது என்பது ஆச்சரியமான ஒன்று. வாழ்கின்ற தமிழ்க்கடவுள் வைரமுத்து அவர்கள் என வைரமுத்துவை பாராட்டி பேசினார் துரைமுருகன்.
பின்னர் பேசிய கவிப்பேரரசு வைரமுத்து, வடசென்னைக்கு வருவதனால் வைரமுத்துவுக்கு தான் பெருமை. வடசென்னைக்கு அல்ல. இந்த மண் திராவிட இயக்கத்தின் பேரியக்கத்திற்கான மண்.
இந்த மண்ணில் தமிழாற்றுப்படையை நான் அறிமுகம் செய்கிறேன் என்கிற போது, வடசென்னை தமிழ்ச்சங்கத்தினருக்கு எனது நெஞ்சார்ந்த வணக்கம்.
துரைமுருகனுக்கும், எனக்கும் உள்ள உறவு என்பது அற்புதமானது. காரணம், நாங்கள் இருவரும் கலைஞர் என்ற திருச்சபையின் மாணவர்கள். நானும், துரைமுருகனும் பேசும் போது கலைஞர் காலத்து நினைவுகள் அனைத்தும் கண்முன்னே வந்து போகும்.
துரைமுருகன் வெறும் அரசியல்வாதி அல்ல ஆழ்ந்த கல்வியாளர். அரசியல்வாதிக்கு அரசியல்வாதி, இலக்கியவாதிக்கு இலக்கியவாதி ஆற்றல் பெற்றவர். கலைஞர் இருவருடன் பேசுவதில் மகிழ்ச்சி கொள்கிறார் என்றால் அதில் ஒருவர் துரைமுருகன் என்றால் அது மிகையல்ல.
தாய்மொழி என்பதால் மட்டும் தமிழை நீங்கள் நேசிக்க வேண்டியதில்லை. தமிழ் மொழி என்பது எனது அறிவு, அழகு, கவிதை, தத்துவம், நாகரிகம், பண்பாடு, வரலாறு என்று சொல்வதை விட எனது அதிகாரம் என்று கருதுகிறேன்.
தமிழ்மொழி என்பது நம் அதிகாரம். அதன்மூலம் அனைத்தையும் பெறமுடியும். கடவுளை மையப்படுத்தாமல், மனிதனை மையப்படுத்தியது தான் திருக்குறள். அண்ணா பல்கலைக்கழகத்தில் பகவத் கீதை கொண்டு வர வேண்டுமா, வேண்டமா என்பதை அறிஞர்கள் முடிவு செய்வார்கள். இந்திய நாகரிகத்துக்கு முகவரியாக இருப்பதே தமிழ் தான்.
இந்திய நாகரிகம் சிந்து நதியில் இருந்து தொடங்க வேண்டும் என்று எண்ணுகிறார்கள். இல்லை, இந்திய நாகரிகம் வைகை நதியில் இருந்துதான் தொடங்க வேண்டும். கீழடிக்கும், வைகை நதிக்கரைக்கும் 2கிலோ மீட்டர் தூரம் தான். கீழடி நாகரிகத்தில் தோண்டப்படும் நாகரிகமே, நதிக்கரை நாகரிகம்.
இந்தியாவில் முதன்முதலில் தோன்றிய நாகரிகம் சிந்து நாகரிகம் அல்ல. வைகை நதிக்கரை நாகரிகம் தான். அண்ணன் துரைமுருகன் பேசியதை, கலைஞர் இருந்து வாழ்த்தியதாக நான் கருதுகிறேன்'' எனத் தெரிவித்தார்.