தமிழ்நாடு

“முதல்வர் ஊரில் சுடுகாட்டிற்கு வழி இல்லை” : இடுப்பளவு தண்ணீரில் சடலத்தை எடுத்துச் செல்லும் அவலம்!

முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில், சுடுகாட்டிற்கு செல்ல வழியில்லாததால் இடுப்பளவு தண்ணீரில் ஆற்றில் கடந்துச் செல்லவேண்டிய அவலம் நீடிக்கிறதுd.

“முதல்வர் ஊரில் சுடுகாட்டிற்கு வழி இல்லை” : இடுப்பளவு தண்ணீரில் சடலத்தை எடுத்துச் செல்லும் அவலம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

சேலம் மாவட்டம் ஓமலூர் பகுதியில் தாத்தியம்பட்டி என்ற கிராமம் உள்ளது. அந்த கிராமத்தில் 200-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. எந்த ஒரு அடிப்படை வசதியும் இல்லாத நிலையில்தான் அப்பகுதி மக்கள் வாழ்ந்துவருகின்றனர்.

அதுமட்டுமின்றி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் உயிரிழந்தால் அவர்களை அடக்கம் செய்வதே பெரும் பிரச்சனையாக நீடித்து வருகிறது. குறிப்பாக அந்த கிராமத்திற்கும் சுடுகாட்டிற்கும் இடையே சரபங்கா என்ற ஆறு ஒடுகிறது.

அந்த ஆற்றின் அக்கரையில் இருக்கிறது சுடுகாடு. இதனால், உயிரிழந்தவர்களின் உடலை, ஆற்றைக் கடந்து எடுத்துச் சென்று அடக்கம் செய்வதை வழக்கமாகக் கொண்டுள்ளனர் இந்த கிராம மக்கள். சமீபத்தில் பெய்த மழையால் ஆற்றில் தண்ணீரின் அளவு அதிகரித்திருக்கிறது.

இந்நிலையில், நேற்று முன்தினம் அப்பகுதியைச் சேர்ந்த பிரசன்னா பிரியன் என்ற கல்லூரி மாணவர் மர்ம காய்ச்சலால் உயிரிழந்தார். அவரை அடக்கம் செய்வதற்காக உறவினர்கள் சென்றபோது ஆற்றில் தண்ணீர் இடுப்பளவு இருந்துள்ளது.

“முதல்வர் ஊரில் சுடுகாட்டிற்கு வழி இல்லை” : இடுப்பளவு தண்ணீரில் சடலத்தை எடுத்துச் செல்லும் அவலம்!

அதனால் பாடையை தூக்கிச்செல்ல முடியாது என்பதால் லாரி டயரில் இருக்கும் டியூப்பில் காற்றை நிறைத்து, அதன்மேல் சடலத்தை வைத்துக் கொண்டு செல்ல முடிவு எடுத்தனர். பின்னர் அதன்படி, சரபங்கா ஆற்றில் இடுப்பளவு தண்ணீரில் சடலத்தை எடுத்துச்சென்றனர்.

வயதானவர்கள் மற்றும் பெண்களால் ஆற்றில் இறங்கி நடந்து வரமுடியாது என்பதால் ஆற்றின் மறு கரையோரம் நின்று இறுதி சடங்கு நிகழ்ச்சியை செய்தனர். இதனால் மாணவரின் உறவினர்கள் ஆற்றில் கடந்துச் சென்று இறுதி சடங்குகளை முறையாக செய்யமுடியாமல் போனதாக வேதனை அடைந்ததாகவும் கூறப்படுகிறது.

இதுகுறித்து மாணவரின் உறவினர் ஒருவர் கூறுகையில், “இதுப்போல தான் அடிக்கடி நடைபெறுகிறது. மழைக் காலங்களில் எங்கள் கிராமத்தில் யாராவது இறந்தால் அவர்களை இந்த ஆற்றைக் கடந்து அடக்கம் செய்யவேண்டிய நிலைமைதான் உள்ளது. இதுபோல கஷ்டப்பட்டு அடக்கம் செய்வது மிகுந்த வேதனை அளிக்கிறது.

இதுகுறித்து பல முறை புகார் அளித்துவிட்டோம், முதல்வர் எங்கள் ஊர் என பெருமைக்கு மட்டுமே சொல்லலாம். இதுபோல சிரமங்களைத் தவிர்க்க ஆற்றின் இந்த கரையில் ஒரு சுடுகாடு அமைத்துக்கொடுங்கள் இல்லையென்றால், ஆற்றைக் கடந்து செல்ல பாலம் அமைத்துக்கொடுங்கள்” என்று அவர் கூறினார்.

வெளிநாடுகளுக்கு சென்று வளர்ச்சியை தேடும் முதலமைச்சருக்கு சொந்த மாவட்டத்தில் உள்ள கிராம மக்களின் தெரியாதது ஏனோ?

banner

Related Stories

Related Stories