பிராட்வே பகுதியில் பழைய வீடொன்றின் மேற்கூரை விழுந்து சிறுவன் உயிரிழந்த விவகாரம் தொடர்பாக டிராஃபிக் ராமசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையிட்டார். அதை மனுவாகத் தாக்கல் செய்யுமாறு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
சென்னை பிராட்வே சண்முகராயன் தெருவில் இந்து அறநிலையத் துறைக்குச் சொந்தமான மிகவும் பழமையான குடியிருப்புகள் உள்ளன. கடந்த புதன்கிழமை இரவு பெய்த பலத்த மழையால் சுரேஷ் என்பவரின் வீட்டின் மேற்கூரை இடிந்து கீழே விழுந்தது.
அந்த வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சுரேஷின் 8 வயது மகன் ஆலன் உடல் நசுங்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தான். சிறுவனின் சகோதரி மெர்சி ஏஞ்சல், தாய் கலைவாணி ஆகியோர் படுகாயமடைந்தனர்.
இதேபோன்று கடந்த வாரம் பெய்த கனமழையில் மண்ணடியில் பழைய வீடு இடிந்து விழுந்ததில் ஜெரினா பேகம் என்கிற பெண் உயிரிழந்தார். பிராட்வேயில் பராமரிக்கப்படாத பழைய கட்டிடங்கள் ஏராளமாக உள்ளன. வசதியில்லாத ஏழைகள் வேறு வழியின்றி இங்கு குடியிருந்து வருகின்றனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த டிராஃபிக் ராமசாமி உயர்நீதிமன்றத்தில் நீதிபதிகள் எம்.சத்யநாராயணன், என்.சேஷசாயி அமர்வு முன்பு முறையீடு செய்தார். இதுதொடர்பாக மனு தாக்கல் செய்தால் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதிகள் தெரிவித்தனர்.