சென்னை வேளச்சேரியை அடுத்த பள்ளிக்கரணையில் கடந்த 12ம் தேதி அ.தி.மு.க பிரமுகரின் இல்லத் திருமண விழாவுக்கு வைக்கப்பட்டிருந்த பேனர் விழுந்ததில் சுபஸ்ரீ என்ற இளம்பெண் உயிரிழந்தது மிகப்பெரிய சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது.
இதனையடுத்து இந்த விவகாரம் தொடர்பாக தாமாக முன்வந்து உயர் நீதிமன்றம் வழக்கை விசாரித்தது. அப்போது விதிகளை மீறி பேனர் வைக்க அனுமதி அளித்த தமிழக அரசுக்கும் அதிகாரிகளுக்கும் கடுமையான கண்டனங்களை நீதிபதிகள் தெரிவித்தனர்.
மேலும், இனி பொதுமக்களைப் பாதிக்கும் வகையிலும், அனுமதியில்லாமலும் தமிழகத்தில் எங்கும் பேனர் வைக்கக் கூடாது என அனைத்து அரசியல் கட்சிகளும் பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து, முதலாவதாக தி.மு.க சார்பில் பேனர் வைக்க மாட்டோம் என உறுதிபட குறிப்பிட்டு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த நிலையில், பேனர் விவகாரம் தொடர்பாக இன்று மீண்டும் வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, தி.மு.க சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வில்சன், இனி தி.மு.க பேனர் வைக்காது என்றும், அவ்வாறு வைத்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார் என்றும் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், பேனர் விவகாரம் தொடர்பாக அப்போதைய தலைமை நீதிபதியாக இருந்த இந்திரா பானர்ஜி பிறப்பித்த உத்தரவை அ.தி.மு.க அரசு இதுகாறும் மதிக்கவில்லை. இளம்பெண் உயிரிழந்தற்கு காரணமான ஜெயகோபாலை அ.தி.மு.க முன்னாள் கவுன்சிலர் என்பதால் காவல்துறை கைது செய்யாமல் உள்ளது எனவும் குற்றஞ்சாட்டினார்.
மேலும், பேனர் விழுந்ததால் இளம்பெண் உயிரிழந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தார்.
இதனையடுத்து, சுபஸ்ரீ உயிரிழந்த விவகாரத்தில் அ.தி.மு.க பிரமுகர் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிவிட்டாரா? இந்த வழக்கில் இது வரை காவல்துறை என்ன நடவடிக்கை எடுத்துள்ளது? காவல்துறை ஆணையர் மேற்பார்வையில் விசாரணை நடைபெறுகிறதா இல்லையா? குற்றவாளி பாதுகாக்கப்படுகிறாரா? என காவல்துறையை நோக்கி சரமாரியாக உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியது.
பின்னர், இனி பேனர் வைக்கமாட்டோம் என ஏன் இதுவரை ஆளுங்கட்சியான அ.தி.மு.க அரசு பிரமாண பத்திரம் தாக்கல் செய்யவில்லை என கேள்வி எழுப்பி, அதற்கு கண்டனமும் தெரிவித்துள்ளது உயர் நீதிமன்றம். இருப்பினும், பேனர் வைக்கமாட்டோம் என திமுக பிரமாண பத்திரம் தாக்கல் செய்துள்ளதற்கு உயர் நீதிமன்றம் பாராட்டு தெரிவித்துள்ளது.
சுபஸ்ரீ பலியான விவகாரத்தில் தமிழக மக்களும், அரசியல் கட்சித் தலைவர்களும் இரங்கல் தெரிவித்த நிலையில், அ.தி.மு.க சார்பில் யாரும் நேரில் வந்து ஆறுதலோ, இரங்கல் அறிவிப்போ வெளியிடவில்லை. தங்களின் தவறினால் இந்த மரணம் நிகழ்ந்தபோதும் அ.தி.மு.க-வும், அரசும் மெத்தனமாகவே இருந்து வருகிறது.
இதுபோதாது என, அ.தி.மு.க கூட்டணியில் இருக்கும் தே.மு.தி.க-வின் பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த், பேனர் விழுவது சாதாரண விஷயம். இதில் சுபஸ்ரீ இறந்ததற்கு அவரது விதிதான் காரணம் என்று தெரிவித்து இருந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.