அண்ணா பல்கலைக்கழகம் 2019-ம் ஆண்டுக்காக பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு தனது புதிய பாடத்திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. அதற்கான பாடத்திட்டத்தை பார்த்த மாணவர்கள் பெரும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளனர்.
அதில் இரண்டாம் ஆண்டு படிக்கும் மாணவர்களுக்கு தத்துவவியல்(Philosophy) படிப்பு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதில் தத்துவவியல் படிப்பு என்னும் பிரிவின்கீழ் பகவத் கீதை பாடமும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
அதில் குறிப்பாக சென்னையில் உள்ள MIT, CEG, ACT, SAP வளாகத்தில் பயிலும் மாணவர்களுக்கு மட்டும் இந்தாண்டு முதல் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதுமாணவர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும், மாணவர்கள் மத்தியில் மதவாத கருத்துக்களை திணிக்கும் நடவடிக்கை என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. ஏற்கனவே இந்தியாவில் பொறியியல் பாடங்கள் வெறும் ஏட்டுக்கல்வியாக இருப்பதாகவும், செய்முறை விளக்கம் இல்லாததால் மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கப்படுவதாகவும் கருத்து நிலவி வரும் நிலையில், மத்திய அரசின் இந்த செயல் பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.
பொறியியல் பயிலும் மாணவர்கள் எதிர்காலத்தில் சமாளிக்கும் பிரச்சனையை குறித்தும், தொழில்களுக்கு ஏற்றவாறு பாடத்திட்டம் கொண்டுவருவதுதான் மாணவர்களின் எதிர்காலத்திற்கு உதவும் என பலர் கருத்துத் தெரிவித்து வருகின்றனர்.
மேலும் தற்போது அண்ணா பல்கலைக்கழகம் அறிமுகப்படுத்தியுள்ள இந்த புதிய பாடத்திட்டத்தை ரத்து செய்யவேண்டும், அதற்கு பதில் மதம் சாராத பாடப்படிப்பைக் கொண்டு வரவேண்டும் என மாணவர்கள் கோரி வருகின்றனர்.