தமிழகம் மற்றும் புதுச்சேரியில் அடுத்த 48 மணிநேரத்திற்கு மிதமானது முதல் கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக செய்தியாளர்களைச் சந்தித்த வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்ததாவது,
வங்கக் கடலில் நிலை கொண்டிருக்கும் மேலடுக்கு சுழற்சி அடுத்த மூன்று நாட்களில் தமிழகம் நோக்கி நகர்வதால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பெரும்பாலான மாவட்டங்களில் மிதமான மழையும், வட தமிழக மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை வரை பெய்ய வாய்ப்புள்ளது எனக் கூறியுள்ளார்.
மேலும், சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் சில பகுதிகளில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்றும் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய அவர், செப்.,24, 25 ஆகிய அடுத்து வரும் இரு தினங்களில் குமரிக்கடல் தென் தமிழக கடற்கரை பகுதி மற்றும், கடலோரப் பகுதிகளில் வலிமையான சூறைக்காற்று வீசக்கூடும் என்பதால் கன்னியாகுமரி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தூத்துக்குடி உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் அடுத்த 48 மணிநேரத்துக்கு தொலைதூர மீன்பிடித் தொழிலில் ஈடுபட வேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த 24 மணிநேரத்தில் அதிகபட்சமாக சிவகங்கை தேவகோட்டை மற்றும் தர்மபுரி பாலக்கோட்டில் 11 செ.மீ மழையும், குறைந்தபட்சமாக கிருஷ்ணகிரி போச்சம்பள்ளியில் 9 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது என புவியரசன் தெரிவித்துள்ளார்.