தமிழகத்தில் தற்போது சட்டம் ஒழுங்கு சீர்கேடுகள் வெகுவாக அதிகரித்து வருகின்றன. வெகு சாதாரண பிரச்னைகளுக்கெல்லாம் கொலைகள் அரங்கேறி வருகின்றன.
மதுரையில் இலவசமாக டீ தரவில்லையென டீக்கடைக்காரர் வெட்டிக் கொல்லப்பட்டது, தூத்துக்குடியில் மெதுவாக வாகனம் ஓட்டிச் செல்லுமாறு அறிவுறுத்திய இருவர் கொல்லப்பட்டது ஆகியவை இதற்கு உதாரணம்.
அந்த வரிசையில், புதிதாக இணைந்திருக்கிறது தேவகோட்டையில் கொடுத்த கடனை திருப்பிக் கேட்ட இளைஞர் வெட்டிப் படுகொலை செய்யப்பட்ட சம்பவம்.
தேவகோட்டை சிவன் கோவில் பகுதியைச் சேர்ந்த பட்டணம் அழகப்ப செட்டியாரின் மகன்கள் சிவமணி அய்யப்பன் (வயது 33) மற்றும் கணேசன். இந்தக் குடும்பத்தினர் தேவகோட்டை ராம் நகரில் உள்ள மிக பிரமாண்டமான அழகப்பா பூங்கா இடத்தை அரசுக்கு இலவசமாக வழங்கியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சிவமணி அய்யப்பனுக்கும், அதே பகுதியைச் சேர்ந்த வினோத் என்பவருக்கும் நட்பு ஏற்பட்டு பணம் கொடுக்கல் - வாங்கல் அளவுக்கு வளர்ந்துள்ளது. ஒருமுறை சிவமணி கொடுத்த ரூபாய் 10,000 பணத்தை திருப்பிக் கேட்கவே, இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றி கைகலப்பாகியுள்ளது.
அப்போது அங்கு வந்த சிவமணி அய்யப்பனின் அண்ணன் கணேசனும் தம்பிக்கு ஆதரவாகப் பேச, கணேசனை வெட்டினார் வினோத். இதுகுறித்து தேவகோட்டை நகர போலிஸார் வழக்குப்பதிவு செய்து வினோத்தை கைது செய்தனர். சிறையில் இருந்த அவர் சமீபத்தில் ஜாமினில் வெளியே வந்தார்.
இந்நிலையில், தேவகோட்டை திருப்பத்தூர் சாலையில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு சிவமணி அய்யப்பன் தனது நண்பர் ஒருவருடன் இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். அவர்களைப் பின்தொடர்ந்து சென்ற வினோத், சிவமணி அய்யப்பனை வழிமறித்து சரமாரியாக வெட்டிக் கொலை செய்தார்.
தகவலறிந்த தேவகோட்டை நகர போலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தி, உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தேவகோட்டை உதவி எஸ்.பி., கிருஷ்ணராஜ் மேற்பார்வையில் போலிஸார் தனிப்படை அமைத்து கொலையாளிகளை தேடி வருகின்றனர்.