பேனர் விழுந்து ஏற்பட்ட விபத்தில் சுபஸ்ரீயின் உயிரிழப்பிற்கு காரணமானவர்களை அரசு காப்பாற்ற நினைத்தால் அதை விடக் கொடுமை உலகத்தில் வேறு எதுவுமில்லை எனத் தெரிவித்துள்ளார் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி.
சென்னை பள்ளிக்கரணை பகுதியில் சாலையோரம் சட்டவிரோதமாக வைக்கப்பட்டிருந்த பேனர் சுபஸ்ரீ என்ற இளம்பெண் மீது விழுந்து போது பின்னே வந்த லாரி மோதி சம்பவ இடத்திலே உடல் நசுங்கி உயிரிழந்தார்.
இச்சம்பவம் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து தி.மு.க உள்ளிட்ட பல அரசியல் கட்சி தலைவர்கள், பேனர் வைக்கக்கூடாது என்று அறிக்கை வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில், சென்னை குரோம்பேட்டையில் உள்ள சுபஸ்ரீயின் இல்லத்திற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி மற்றும் எச்.வசந்தகுமார் எம்.பி., ஆகியோர் சென்று அவரது பெற்றோரைச் சந்தித்து ஆறுதல் கூறினர்.
பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த கே.எஸ்.அழகிரி, “பேனர் விவகாரத்தில் சம்மந்தப்பட்டவர்களை அரசு காப்பாற்ற நினைத்தால் அதை விடக் கொடுமையானது வேறொன்றுமில்லை.
சாவில் கூட வேண்டியவர்கள், வேண்டாதவர்கள் என்ற பாகுபாடு இருக்கக்கூடாது. குற்றம்சாட்டப்பட்ட நபர் இதுவரை கைது செய்யாமல் இருப்பது தவறான முன்னுதாரணம்.
உடனடியாக சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட வேண்டும்; விசாரிக்கப்பட வேண்டும் தண்டனை என்பது அதற்கடுத்த நிலை. குறைந்தப்பட்சம் கைது நடவடிக்கைக்கோ, விசாரணைக்கு அழைப்பதிலோ என்ன தவறு இருக்கிறது.
அதைக் கூட இந்த அரசாங்கம், மாவட்ட நிர்வாகம், காவல்துறையினர் செய்யவில்லை என்றால் அவர்கள் யார் என்று நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.” எனக் குற்றம்சாட்டினார்.