மதுரை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள கீழடியில், நான்காம் கட்ட அகழாய்வுப் பணிகள் முடிந்து, ஐந்தாம் கட்ட அகழாய்வுப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதில் பத்து அடியில் குழிகள் பறித்து தொல்லியல் துறை ஆய்வுகளை நடத்தி வருகிறது.
இந்த அகழாய்வில் பண்டைய தமிழர்களின் கல்வியறிவை பறைசாற்றும் விதமான ஆதாரங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எலும்பால் செய்யப்பட்ட எழுத்தாணி ஐந்தாம் கட்ட அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டது. இதுபெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
இந்நிலையில், கீழடியில் செய்யபட்டு வரும் ஆய்வு குறித்து தமிழக தொல்லியல்துறை ஆய்வு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில் வைகை நதிக்கரை நாகரிகம் 2,600 ஆண்டுகள் பழமையானது என்று குறிப்பிடபட்டுள்ளது.
2,600 ஆண்டுகள் பழமையானது நம் கீழடி!
குறிப்பாக. கடந்த 2018ம் அண்டு கீழடியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வின்போது கிடைத்த மாதிரிகளை சேகரித்த தொல்லியல் துறை, அமெரிக்காவின் ‘பீட்டா பகுப்பாய்வு சோதனை ஆய்வக நிலையத்திற்கு’ அனுப்பி வைத்தது.
அந்த ஆய்வக சோதனையில், இந்த மாதிரிகளின் காலம் கி.மு.580 என்று கணிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கீழடியில் நகர உருவாக்கம் கி.மு.6-ம் நூற்றாண்டிலேயே தொடங்கிவிட்டது என தெரியவருகிறது.
தமிழர்களின் எழுதும் பழக்கம்
கி.மு. 6-ம் நூற்றாண்டளவிலேயே தமிழ் சமூகம் எழுத்தறிவு பெற்ற விளங்கியுள்ளதும் இந்த ஆய்வில் உறுதியாகிறது. இது கீழடியில் கிடைத்த உடைந்த பானைகளில் உள்ள எழுத்து வடிவம் மூலம் தெரிந்துக் கொள்ளமுடிகிறது.
கீழடியில் கண்டெடுக்கப்பட்டு கீறல் ஓடுகள் குறித்த ஆய்வில், 1001 பானை ஓடுகள் இந்தக் காலத்தில் இருந்தது என்று கூறுகின்றனர்.
கீழடி அகழாய்வில் உள்ள குறீயிடுகள் தமிழ் பிராமி எழுத்து குறீயிடு ஆகும். இவற்றில் குவிரன் ஆத[ன்], ஆதன் போன்ற பெயர்களும், முழுமைபெறாத சில எழுத்துகளுடன்கூடிய உடைந்த பானை ஓடுகளும் கிடைக்கப்பெற்றுள்ளன.
இதில் வரும் ‘ஆதன்’ என்ற பெயர் ‘அதன்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் எலும்புகளாலான எழுத்தாணி கண்டடெடுக்கப்பட்டது. இதன் மூலம் உலகின் மூத்தகுடியான தமிழர்கள், மொழியையும், அறிவையும் கொண்டு நாகரிக வாழ்க்கை வாழ்ந்து வந்தனர் என்பதற்கு கீழடி ஒரு சாட்சி.
மத அடையாளம் இல்லாமல் வாழ்ந்த தமிழர்கள்!
கீழடி அகழாய்வுகளில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொல்பொருட்கள் கண்டறியப்பட்டன. குறிப்பாக சுடுமண்ணாலான 13 மனித உருவங்கள், 3 விலங்கு உருவங்கள், 650க்கும் மேற்பட்ட விளையாட்டு பொருட்கள், 35 காதணிகள், அணிகலன்கள், தங்கம், செம்பு இரும்பு போன்ற உலோக தொல்பொருட்கள் கிடைத்தன.
ஆனால் இதில் கடவுள் வழிபாட்டுடன் தொடர்புடைய எந்த அடையாளமும் அங்கு கிடைக்கவில்லை என்று அறிக்கையில் சொல்லப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் உலகில் முத்தகுடிகளான தமிழர்கள் மத்தியில், மதம் என்ற ஒன்று இல்லை என்பது நிரூபனமாகிறது. மேலும் ஆய்வு அறிக்கையில் சொல்லப்பட்டிருப்பதின் மூலம் தமிழ் சமூகம் மிகவும் தொன்மையான நாகரீகம் என்று கருதப்படுகிறது.