வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம், புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்திருந்தது. அதிலும், வட தமிழகம் மற்றும் புதுச்சேரி கடற்கரை பகுதிகளில் மணிக்கு 50 கி.மீ வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் தெரிவித்தது. இதனையொட்டி, புதுச்சேரியில் புயல் எச்சரிக்கை கூண்டும் ஏற்றப்பட்டது.
இப்படி இருக்கையில், சென்னை, திருவள்ளூரில் நேற்று நள்ளிரவு பெய்த கனமழையால் சாலையில் மழை நீர் ஆறுபோல் தேங்கியுள்ளது. சென்னையின் முக்கிய பகுதிகளான தியாகராய நகர், நுங்கம்பாக்கம், வடபழனி, திருவொற்றியூர், வியாசர்பாடி, பெசண்ட் நகர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த மழை பெய்ததால் சாலையில் நீர் பெருக்கெடுத்து ஓடுகிறது.
சில பகுதிகளில் சாலைகளே தெரியாத அளவுக்கு முழங்கால் வரை மழைநீர் தேங்கியுள்ளது. விடிய விடியப் பெய்த மழையால் சுரங்கப்பாதைகள், குண்டும் குழியுமாக உள்ள சாலைகளில் பயணிக்க முடியாத வகையில் தேங்கியுள்ள மழை நீரால் மக்கள் அவதியுறுகின்றனர்.
இதனைக் காட்டிலும், சென்னையில் உள்ள பள்ளிகளில் மழை நீர் தேங்கியுள்ளதால் பள்ளிக் குழந்தைகள், மாணவர்கள் பள்ளிக்கு ஊர்ந்து செல்லும் சூழலுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
சாதாரண மழைக்கு விடுமுறை அறிவிக்கும்போது, தற்போது கனமழை பெய்தபோதும், தேர்வு நேரத்தை கருத்தில் கொண்டு பள்ளிக்கல்வித்துறை விடுமுறை அளிக்காமல் உள்ளது. தேங்கிக் கிடக்கும் நீரில் நடந்து பள்ளிக்குச் செல்வதால் குழந்தைகளுக்கு உடல் உபாதை ஏற்பட்டுவிடுமோ என பெற்றோர்கள் மத்தியில் அச்சம் ஏற்பட்டுள்ளது.
முறையான ஒப்பந்ததாரர்களிடம் சாலை அமைக்கும் பணிகளை ஒப்படைக்காமல், தங்களது உறவினர்களுக்கு அரசு டெண்டர்களை கொடுத்ததன் விளைவாகவே தற்போது சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மழை நீர் வெள்ளம் போன்று தேங்கியுள்ளது.
இதனால் சாலைகளில் நிறுத்திவைக்கப்பட்ட வாகனங்கள் கரப்பான்பூச்சி போன்று கவிழ்ந்து கிடக்கின்றன. அதுமட்டுமல்லாமல், தேங்கியுள்ள மழைநீரால் நோய்த் தொற்று ஏற்படும் என்றும் மக்கள் அச்சமடைந்துள்ளனர்.