சென்னையைச் சேர்ந்த மாணவன் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து தேனி மருத்துவக்கல்லூரியில் சேர்ந்த விவகாரம் தொடர்பாக சென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்குனரகத்தில் மருத்துவ கல்வி இயக்குனரகத்தின் பொறுப்பு இயக்குனர் நாராயணபாபு மற்றும் தேர்வுக் குழு செயலர் செல்வராஜ் ஆகியோர் செய்தியாளர்களை சந்தித்தனர்.
அப்போது பேசிய அவர்கள், “தேனி மருத்துவக் கல்லூரியில் மாணவர் ஒருவர் முறைகேடாகச் சேர்ந்துள்ளது குறித்து அந்த மருத்துவக் கல்லூரி முதல்வருக்கு அசோக்குமார் மின்னஞ்சல் மூலமாகத் தகவல் தெரிவித்துள்ளார்.
அதன் அடிப்படையில் மருத்துவமனை முதல்வர் 4 பேர் கொண்ட ஒரு குழு அமைத்து விசாரணை மேற்கொள்ள உத்தரவிட்டார். இதையடுத்து, அம்மாணவரின் புகைப்படமும், தேர்வு எழுதியபோது கொடுத்த புகைப்படமும் வெவ்வேறாக இருந்தது கண்டறியப்பட்டு அந்த மாணவரையும், அவரது பெற்றோரையும் அழைத்து விசாரித்தனர்.
இதைத்தொடர்ந்து அம்மாணவர் மருத்துவப் படிப்பில் இருந்து விலகிக் கொள்வதாகத் தெரிவித்துள்ளார். அவர் மீது காவல் நிலையத்திலும் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் நீட் தேர்வு ஆள்மாறாட்டம் குறித்து பல கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. விசாரணைக்குப் பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.
மாணவர் சேர்க்கை குறித்து அனைத்து மருத்துவக் கல்லூரிகளிலும் ஆய்வுகள் நடத்தப்படும். இதுபோன்ற முறைகேடுகளைத் தவிர்க்க எதிர்காலத்தில் மாணவர்களின் பெருவிரல் ரேகையும் அவர்களுக்கான அடையாளமாக பயன்படுத்தப்படும்” எனத் தெரிவித்தனர்.
ஆள்மாறாட்டம் செய்து கல்லூரியில் சேர்ந்த அந்த மாணவன் சென்னையைச் சேர்ந்த மருத்துவரின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. அந்த மாணவன், கடந்த 2 ஆண்டுகளாக நீட் தேர்வு எழுதி தோல்வியடைந்து, இந்த ஆண்டு மஹாராஷ்டிராவில் நடைபெற்ற தேர்வில் ஆள்மாறாட்டம் செய்து வெற்றிபெற்று தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துள்ளார்.
நீட் தேர்வு எழுதச் செல்லும் மாணவ, மாணவிகளை சோதனை என்கிற பெயரில் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாக்கிய செய்திகள் வெளிவந்தன. ஆனால், வட மாநிலங்களில் ஆள் மாறாட்டமே நடைபெற்றுள்ளது பெரும் கேள்விகளை எழுப்பியுள்ளது.