கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமினில் வெளியே வந்துள்ள பேராசிரியர் நிர்மலாதேவி, ஆராய்ச்சி மாணவர் கருப்பசாமி ஆகியோர் ஸ்ரீவில்லிபுத்தூர் மகிளா நீதிமன்றத்தில் ஆஜராகினர்.
வழக்கமாக காரில் வரும் நிர்மலாதேவி இன்று இருசக்கர வாகனத்தில் தலைக்கவசம் அணிந்து வந்தார். உதவிப் பேராசிரியர் முருகன் இன்று ஆஜராகவில்லை. இந்த வழக்கை விசாரித்த நீதிபதி மூன்று பேரும் வரும் 27ம் தேதி ஆஜராகுமாறு உத்தரவிட்டார்.
பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த பேராசிரியை நிர்மலாதேவியின் வழக்கறிஞர் பசும்பொன் பாண்டியன், “ஜாமினில் வெளியே இருக்கும் நிர்மலாதேவிக்கும் அவரது குடும்பத்தினருக்கும் அரசியல் மிரட்டல்கள் வருகின்றன.
தற்போதைய ஆளுநர் தமிழகத்தில் இருக்கும்வரை இந்த வழக்கு விசாரணை சரியாக நடைபெறாது. சிறையில் அனுபவித்த தனிமை மற்றும் கொடுமை காரணமாக மனநலம் பாதிக்கப்பட்டிருந்த நிர்மலா தேவி தற்போது உரிய சிகிச்சைக்கு பின்பு நலமுடன் இருக்கிறார்.” எனத் தெரிவித்தார்.